22 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூலம்: சட்டத்தரணிகள் ஒன்றிணைவு எச்சரிக்கை
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டாலும் மக்கள் கருத்துக்கணிப்பை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க வேண்டிய சூழ்நிலை ஜனாதிபதிக்கு உருவாகுமென சட்டத்தரணிகள் ஒன்றிணைவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு 30 நாள்களுக்குள் மக்கள் கருத்துக்கணிப்பை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகுமென அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியான நிலை
இதனூடாக 2 தேர்தல்களை நடத்த வேண்டிய சுமை இலங்கைக்கு ஏற்படுவதுடன், அது நெருக்கடியான நிலையை தோற்றுவிக்குமென சட்டத்தரணிகள் ஒன்றிணைவு எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்துக்கணிப்பை நடத்துவதற்கு மாத்திரம் பல பில்லியன் ரூபாவை செலவிட நேரிடும் என சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் ஒன்றிணைவு, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லையென இலங்கை அரசாங்கம் பல தடவைகள் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றம் அல்லது ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் வரையறுக்க வேண்டிய அவசர தேவை ஏற்படவில்லை என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம், தேர்தல் முறையை மேலும் நெருக்கடிக்கு கொண்டுசெல்வதற்கான முயற்சியாகும் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலும் நடத்தப்பட வேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |