21 வது அரசியல் யாப்பு திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை: சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
21 வது அரசியல் யாப்பு திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை மாறாக ஆபத்துக்கள் இங்கும் இருக்கின்றன என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மலையக கட்சிகளை முன்னுதாரணமாக கொண்டு வடக்கு- கிழக்கு தமிழ் கட்சிகளும் செயற்படவேண்டும் என்று அவர் நேற்று (01.10.2022) தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
22வது திருத்தம் 21வது திருத்தம் என்ற பெயரில் நிறைவேற்றுப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளும் மொட்டுக்கட்சியின் பெரும் பகுதியினரும் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
21வது திருத்ததிற்கு ஆதரவு
தமிழ்த்தேசியக்கட்சிகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவினை வழங்கியுள்ளது. ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலையைத் தான் பாராளுமன்றத்தில் எடுக்க முடியும் நடுநிலை என்ற ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று மக்களுக்கு வகுப்பெடுத்த சுமந்திரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
கட்சி என ஒன்றிலிருந்த போதும் எல்லாவற்றிலும் தனித்து தீர்மானமெடுக்கும் விக்கினேஸ்வரனும் ஆதரவாக வாக்களித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
22வது திருத்தம் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் காரணமாகவே கொண்டுவரப்பட்டது. இத்திருத்தத்திற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று சிங்கள தேசத்தை ஜனநாயக மயப்படுத்துவது. இரண்டாவது ராஜபக்சாக்களை உடைத்து தனிமைப்படுத்துவது. இந்த இரண்டிலும் மேற்குலகத்தின் நிறைவேறியது என்றே கூறலாம்.
பல துண்டுகளாக சிதறிய மொட்டுக்கட்சி
தற்போது மொட்டுக்கட்சி பலதுண்டுகளாக சிதறியுள்ளது. இங்கு சிங்கள தேசத்தை ஜனநாயகமயப்படுத்துவது என்பது முழு இலங்கைத்தீவையும் ஜனநாயகமயப்படுத்துவது என அர்த்தமல்ல.
முழுத்தீவையும் ஜனநாயகமயப்படுத்துவது என்றால் அனைத்து தேசிய இனங்களின் அபிலாசை அரசியல் யாப்பு ரீதியாக உள்வாங்கப்படல் வேண்டும். 22வது திருத்தம் இவ்விவகாரத்தில் சிறிது கூட கவனம் செலுத்தவில்லை.
21வது திருத்தத்தினால் தங்களுக்கு என்ன பயன்?
தமிழ் மக்கள் நிலை நின்று பார்ப்போமானால் 22வது திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை. மாறாக ஆபத்துக்கள் இங்கும் இருக்கின்றன. ஏற்கனவே இந்தத் திருத்தம் தொடர்பாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான அம்பிகா சற்குணநாதனும், நிமல்கா பெர்னாண்டோவும் இத்திருத்தத்திற்கு பின்னால் நின்ற அமெரிக்காவின் இலங்கைத்தூதுவரிடம் “தமிழ் மக்கள் 21வது திருத்தத்தினால் தங்களுக்கு என்ன பயன்” எனக்கேட்கின்றனர் எனத் தெரிவித்திருந்தனர்.
சுமந்திரன் “21வது திருத்தம் தமிழ்த்தேசிய அக்கறை கொஞ்சம் கூட பிரதிபலிக்கவில்லை” கூறியிருந்தார். தமிழ் மக்களுக்கு எந்த வித பயனுமில்லாத அதே வேளை ஆபத்தை தரக்கூடிய திருத்தத்திற்கே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையும் விக்கினேஸ்வரனும் வாக்களித்துள்ளனர்.
தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக செயற்படக்கூடிய ஆபத்து
21வது திருத்தத்தில் முக்கியமான விடயங்கள் அரசியலமைப்பு பேரவையும், சுயாதீன ஆணைக்குழுக்களும் தான் இந்த இரண்டு அமைப்புக்களும் தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக செயற்படக்கூடிய ஆபத்துக்கள்.
இந்த ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்கான திருத்தங்கள் எவற்றையும் தமிழ்த்தேசியக்கட்சிகள் முன் மொழியவில்லை ஏற்கனவே சமூக விஞ்ஞான ஆய்வு மையம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இரண்டு முன்மொழிவுகளை வைத்திருந்தது.
ஒன்று அரசியலமைப்புப் பேரவையிலும் சுயாதீன ஆணைக்குழுக்களிலும் தமிழ் மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.இரண்டாவது இரண்டு அமைப்புக்களிலும் தமிழ் மக்கள் சம்பந்தமான விவகாரங்களில் தீர்மானிக்கும் அதிகாரம் தமிழ் மக்களிடம் இருத்தல் வேண்டும்.
21 வது திருத்தம் தொடர்பாக பல தவறுகள்
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததினால் அரசியலமைப்புப் பேரவையும் சுயாதீன ஆணைக்குழுக்களும் தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக செயற்படும் ஆபத்து நிறையவே உள்ளது. தமிழ்த்தேசியக்கட்சிகள் 21 வது திருத்தம் தொடர்பாக பல தவறுகளை விட்டிருக்கின்றன.
- ஒருங்கிணைந்த அணுகுமுறை இங்கு பின்பற்றப்படவில்லை. துண்டு துண்டான அணுகுமுறையே பின்பற்றப்பட்டது. இதனால் இந்த விவகாரத்தில் கூட்டுக்குரல் என்பது வெளிப்படவில்லை.
- இலக்கிலாவது ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றியிருக்கலாம் அதுவும் இடம்பெறவில்லை. ஒரு பகுதியினர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இன்னொரு பகுதியினர் நடுநிலை வகித்துள்ளனர்.
- எந்தக்கட்சிகளும் இந்தத் திருத்தம் தொடர்பாக துறை சார் நிபுணர்களுடன் கலந்துரையாடவில்லை.
- கட்சிகள் கட்சி மட்டத்திலும் இத்திருத்தம் தொடர்பான வலுவான உரையாடலை நடாத்தவில்லை.
- மக்கள் மத்தியிலும் எந்த உரையாடலையும் நடாத்தவில்லை.
- தங்களுடைய நிலைப்பாட்டிற்கான காரணங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவும் தமிழ்த்தேசியக்கட்சிகள் இல்லை.
21வது திருத்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை இதனை சமூக விஞ்ஞான ஆய்வு மையம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தப்போக்கிலிருந்து தமிழ்த்தேசியக்கட்சிகள் விடுபட்டால் இக்கட்சிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த சமூகவிஞ்ஞான ஆய்வு மையம் ஒரு போதும் தயங்காது.