21வது திருத்தத்தை தமிழ் தேசியக்கட்சிகள் ஆதரிக்கக்கூடாது: சி.அ.யோதிலிங்கம்
21வது திருத்தத்தைத் தமிழ் தேசியக் கட்சிகள் ஆதரிக்கக் கூடாது என்றும், மீறி ஆதரித்தால் மக்கள் முன்னால் அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் யாழ். ஊடக மையத்தில் இன்று நடத்திய ஊடக மாநாட்டில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
21ஆவது திருத்தத்தின் நோக்கம்
அரசியல் யாப்பிற்கான 21ஆவது திருத்தம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி அவ்வதிகாரங்களை அமைச்சரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள், அரசியல் அமைப்பு பேரவை என்பவற்றிடம் பகிர்ந்து வழங்குதலே திருத்தத்தின் நோக்கமாகும்.
இத்திருத்தம் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தென் இலங்கையில் சூடுபிடித்துள்ளன. பொதுஜன முன்னணியினரும் மகா நாயக்கர்களும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகளவில் குறைக்கப்படுவதை ஏற்கவில்லை.
ராஜபக்சக்களின் இருப்பிலேயே பொதுஜன முன்னணி தங்கியிருப்பதால் அதிகாரங்களைக் குறைத்து ராஜபக்சக்களை பலவீனப்படுத்தப் பொதுஜன முன்னணியினர் விரும்பவில்லை.
மகாநாயக்கர்கள் 13ஆவது திருத்தமும், விகிதாசார பிரதிநிதித்துவமும் இருப்பதால் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் பலம் பெற்று விடுவார்களோ என அஞ்சி ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதை ஏற்கவில்லை. அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் பீடாதிபதிகள் இதனை நேரடியாகவே நீதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
மறுபக்கத்தில் எதிர்க்கட்சிகள் 21ஆவது திருத்தத்தை ஆரம்பமாகக் கொண்டு ஜனாதிபதி முறை முழுமையாக நீக்கப்படல் வேண்டும் என்றே வற்புறுத்துகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என அனைத்தும் இதில் அடக்கம்.
சிங்கள தேசத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான திருத்தம்
இதனை ஒரு வகையில் பெருந்தேசிய வாதத்தின் லிபரல் முகத்திற்கும் பெருந்தேசியவாதத்தின் இனவாத முகத்திற்கும் இடையிலான போராட்டம் எனலாம்.
தென்னிலங்கையின் போட்டி அரசியல் எவ்வாறாவது இருந்துவிட்டு போகட்டும். 21 ஆவது திருத்தம் அடிப்படையில் சிங்கள தேசத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான திருத்தம். இலங்கைத் தீவை ஜனநாயகப்படுத்துவதற்கான திருத்தம் அல்ல.
ஒடுக்கப்படும் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மலையக மக்களின் நலன்கள் அங்கு எந்த வகையிலும் உத்தரவாதப்படுத்தப்படவில்லை.
போதிய பிரதிநிதித்துவமும் தாங்கள் சார்ந்த இனங்களின் நலன்கள் தொடர்பாகத் தீர்மானிக்கும் அதிகாரமும் இருந்தால் மட்டுமே குறைந்தபட்சமாவது தமிழ், முஸ்லிம், மலையக மக்களை இத்திருத்தம் திருப்திப்படுத்தும் என நம்புகின்றோம்.
19ஆவது திருத்தத்தில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கான பிரதிநிதித்துவம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 21 ஆவது திருத்தத்தில் அவை எதுவும் இல்லை.
வெறுமனே பிரதிநிதித்துவம் இருந்தாலும் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை குறைந்த பட்சம் தாங்கள் சார்ந்த இனங்களின் விவகாரங்கள் தொடர்பாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவர்களிடம் இருக்க வேண்டும்.
சுயாதீன ஆணைக்குழுக்களிலும் திட்டவட்டமான பிரதிநிதித்துவம் தமிழ் , முஸ்லிம், மலையக மக்களுக்கு இல்லை.
ஜனாதிபதி தயவு பண்ணினால் மட்டும் பிரதிநிதித்துவம் கிடைக்கலாம். ஜனாதிபதியின் தயவினால் நியமிக்கப்படும் ஒருவர் அவருக்கு விசுவாசமாக இருக்க முற்படுவாரே தான் சார்ந்த மக்களுக்கு விசுவாசமாக இருப்பார் எனக் கூறிவிட முடியாது.
அமைச்சரவையின் நிலை அனைவருக்கும் தெரிந்ததே! தமிழ் மக்கள் அமைச்சரவையில் இனப்பிரச்சினை தீரும் வரை இணைந்து கொள்வதில்லை என முடிவெடுத்துள்ளதால் அது பற்றிப் பெரிதாக அக்கறைப்படவில்லை.
ஆனால் மலையக முஸ்லிம் மக்கள் அக்கறைப்பட வேண்டும். தாம் சார்ந்த இனங்களில் விவகாரத்தில் தீர்மானிக்கும் அதிகாரமும், போதிய பிரதிநிதித்துவமும் அவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.
எனவே தமிழ் மக்கள் மத்தியில் பணியாற்றும் அமைப்பு என்ற வகையில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினராகிய நாம் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் பின்வரும் இரு கோரிக்கைகளை 21 ஆவது திருத்தம் தொடர்பாக முன்வைக்கின்றோம்.
1. 21 ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்படுகின்ற அரசியல் அமைப்புப் பேரவையிலும், சுயாதீன ஆணைக்குழுக்களிலும் போதிய பிரதிநிதித்துவம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.
2. குறைந்தபட்சம் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களிலாவது தீர்மானிக்கும் அதிகாரம் தமிழ்ப் பிரதிநிதிகளிடம் இருத்தல் வேண்டும்.
இந்த இரண்டு கோரிக்கையையும் அரசாங்கம் ஏற்காவிட்டால் 21ஆவது திருத்தத்தைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஆதரிக்கக் கூடாது. இதனைத் திட்டவட்டமாக அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தப் பணியை மேற்கொள்ளாது வழமைபோல ரணில் அரசாங்கத்தைத் தாங்கிப்பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆதரவு கொடுத்தால் தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பகிரங்கமாக அம்பலப்படுத்துவோம் என்பதையும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.
சிங்கள தேசத்தின் நலன்களைக் கவனிக்க அங்கு பலர் இருக்கின்றனர். தமிழத் தலைவர்
சிங்கள தேசத்தை ஜனநாயகப்படுத்துவதற்காகக் குத்தி முறியவேண்டியதில்லை. தமிழ்
மக்கள் அதற்காக அவர்களைத் தேர்ந்தெடுக்கவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.