2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்
2023 டிசம்பர் 2 ஆம் திகதி பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிராம உத்தியோகஸ்தர்களுக்கான பரீட்சை முடிவுகளின்படி, பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற 2100 விண்ணப்பதாரர்களுக்கு கிராம உத்தியோகஸ்தர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (08) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. அடையாளமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில நியமனக் கடிதங்களை வழங்கி வைத்துள்ளார்.
அஸ்வெசும, உறுமய போன்ற வேலைத் திட்டங்கள் குறித்து புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, குறைந்த வருமானம் பெறும் மக்களை மேம்படுத்த அரசாங்கம் இந்த திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும், தமது பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக இந்த வேலைத் திட்டங்களில் இணைந்து தீவிரமாக செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
4FAQI
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
''இன்று கிராம அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இன்று முதல் நீங்கள் அரசாங்க சேவையில் வெற்றிகரமான அங்கமாக மாறியுள்ளீர்கள்.
இந்த நாட்டின் அனைத்து மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்ப முயற்சி செய்து வருகிறோம். நாட்டின் அடிப்படை நிர்வாகப் பிரிவான கிராம அலுவலர் பிரிவாக உங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். நாங்கள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதோடு அதிலுள்ள பல நிபந்தனைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போதைய அபிவிருத்தித் திட்டம் கிராமத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெற்றிகரமான அறுவடையைப் பெற முடிந்தது. மேலும், 2023 ஆம் ஆண்டின் பெரும் போகத்தில், மீண்டும் வெற்றிகரமான அறுவடையைப் பெற்றோம்.
இந்த பங்களிப்பின் காரணமாக இன்று நாம் பொருளாதார ரீதியில் வலுவடைந்துள்ளோம். இதன் மூலம் இன்று 2100 கிராம உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள முடிந்தது.
நிர்வாகப் பணிகள் மட்டுமின்றி, கிராமப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பொறுப்பும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து செயற்பட வேண்டிய 04 பிரிவுகளை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |