இலங்கை விசா விதிமுறைகளை மீறிய 21 இந்தியர்கள் கைது
இலங்கையின் விசா விதிமுறைகளை மீறிய குற்றத்தில் 21 இந்தியர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (12.03.2024) நீர்கொழும்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலவச - விசா
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் போது குறித்த சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் இலங்கை வருகை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவர்கள் குறித்த பகுதியில் உள்ள வீடொன்றி்ல் இணைய வழி வர்த்தக நிலையம் ஒன்றினை நடத்தி வந்துள்ளனர்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முன்னோடித் திட்டத்தின் (pilot project) ஒரு பகுதியாக மார்ச் 31 வரை பல நாடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இலவச விசா (visa - free ) வசதியை சந்தேக நபர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளமை இதன்போது தெரிய வந்துள்ளது.
சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள சட்டத்தின் படி, சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருபவர்கள் ஊதியம் அல்லது ஊதியம் இல்லாத வேலைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறும் விதமாக செயற்பட்டமையினாலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்படுவதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இந்தியர்கள் வெலிசரவில் உள்ள திணைக்கள தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |