மீறப்படும் மனித உரிமைகள்.. ஐ.நா பொதுச் செயலாளர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
உலகம் முழுவதும் மனித உரிமைகள் "முழு அளவிலான தாக்குதலுக்கு" உள்ளாகியிருப்பதாகக் கூறி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆற்றிய உரையில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வலிமை உள்ளவர்களே சட்டத்தை தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், உலகத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமான மனித உரிமை விதிகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பின்பற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரின் நான்காவது ஆண்டில் 15,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதையும், காசா பகுதியில் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் பகிரங்கமாக மீறப்படுவதையும் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச சமூகம் இதில் மெத்தனமாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், மனித உரிமைகள் வீழ்ச்சியடையும் போது அமைதி, வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை என அனைத்தும் சிதைந்துவிடும் என்று குறிப்பிட்டார்.
உலக தலைவர்களிடம் வேண்டுகோள்
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பாகுபாட்டை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுவதாகவும், உலகம் முழுவதும் ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

ஈரான் போன்ற நாடுகளில் போராட்டங்கள் வன்முறையான முறையில் ஒடுக்கப்படுவதையும், அகதிகள் மற்றும் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவதையும் அவர் தனது உரையில் வன்மையாகக் கண்டித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை (Security Council) மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை வலியுறுத்திய குட்டெரெஸ், 1945இல் இருந்த உலகத்தை பிரதிபலிக்காமல் இன்றைய காலத்திற்கு ஏற்ப இந்த அமைப்புகள் மாற வேண்டும் என்றார்.
வீட்டோ அதிகாரங்கள் அரசியல் கேடயமாகப் பயன்படுத்தப்படும்போது குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதும், அப்பாவி மக்களின் உரிமைகள் மிதிக்கப்படுவதும் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.
இறுதியாக, மனித உரிமைகள் என்பது ஒரு சில நாடுகளுக்கு மட்டுமான ஆடம்பரமான விஷயம் அல்ல என்றும், அது உலகளாவிய கடமை என்றும் குறிப்பிட்ட அவர், அரசியல் ஆதாயங்களுக்காக மனித உரிமைகளை அடகு வைக்க வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.