வடக்கு மாகாணத்திற்கு முக்கியமான 2026ஆம் ஆண்டு - ஆளுநர் உறுதி
அடுத்த ஆண்டு வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அபிவிருத்திக்கு மிகப்பெரிய பாய்ச்சல் மிக்க ஆண்டாகவே அமையப்போகின்றது என ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொறியியல் சேவை மற்றும் இணைந்த சேவையின் தொழில்நுட்பவியல் சேவை பதவிக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை (12.11.2025) நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் உரையாற்றுகையில்,
“கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கவில்லை அல்லது ஒதுக்கப்பட்ட நிதிகளும் அரசியல்வாதிகளுடைய தலையீடுகளுடனே திட்டங்களை நடைமுறைப்படுத்த விடுவிக்கப்பட்டிருந்தன.
அபிவிருத்தியில் முன்னுரிமை
ஆனால், இப்போது அவ்வாறான நிலைமையில்லை. பல மடங்கு நிதி ஒதுக்கப்படுவதுடன் எந்தவொரு தலையீடும் இல்லாமல் திட்டங்களை அதுவும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை அடையாளப்படுத்தி முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களுக்குமே அபிவிருத்தியில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியிருக்கின்றது. அதைக் கருத்திலெடுத்தே நீங்களும் பணியாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

