இலங்கையின் நிதி நிலைமை தொடர்பில் இனி கனவு காணாதீர்கள்: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இலங்கையின் நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காணக் கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இம்முறை அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்கி வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார மீட்சி
"நாட்டின் பொருளாதார மீட்சிக்கு எடுத்த சிறந்த தீர்மானங்களால் பெருமை கொள்கின்றோம்.
பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச் செய்யவும், நிதி ஒழுக்கத்தை நிலைப்படுத்தவும் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பணவீக்கத்தை 5 சதவீதத்துக்குக் குறைவான மட்டத்தில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காணக் கூடாது. மாகாண சபைத் தேர்தல் குறித்து சட்டமா அதிபரின் கருத்துக்களைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு - செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |