2025 மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடர்: இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற இந்திய-இங்கிலாந்து அணிகள்
2025ஆம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் கிண்ணத் தொடரின் 6ஆவது நாளில் இந்திய(India) அணி இலங்கை அணியை 5விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
நேற்று இலங்கையின் கட்டுநாயக்காவில் உள்ள சுதந்திர வர்த்தக வலய கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியிலேயே இந்த வெற்றியை இந்திய அணி பெற்றுக்கொண்டுள்ளது.
இந்திய அணி முதலிடம்
இந்த வெற்றியின் மூலம், புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்றது.
தரிந்து திவங்க 28 ஓட்டங்களையும், சன்னி உடுகம ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணியின் அமீர் ஹசன் 14 ஓட்டங்களுக்கு மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சார்பில் மஜித் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அந்தவகையில் இந்திய அணி 12 ஓவர்களில் இலக்கை அடைந்து இறுதிப்போட்டிக்கும் தகுதியை பெற்றது.
இதேவேளை இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தானிய அணிக்கும் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றபோதிலும் ஏற்கனவே தொடரில் பெறப்பட்ட வெற்றிப் புள்ளிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
மாற்றுத்திறனாளி அணிகள்
நேற்றைய போட்டியின் போது பாகிஸ்தானிய அணி முதல் துடுப்பாட்டத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 71 ஓட்டங்களை பெற்றது. குலாம் 28 ஓட்டங்களையும், அக்சாக்சாய் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
எனினும் இங்கிலாந்து அணி குறித்த ஓவர்களில் 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்தநிலையில் இறுதிப்போட்டி இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 2025 ஜனவரி 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2025 ஜனவரி 12ஆம் திகதி முதல் ஜனவரி 21ஆம் திகதி வரையில் இலங்கையில் இடம்பெறும் இந்தப் போட்டித்தொடரில், இலங்கை, இந்தியா,இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த மாற்றுத்திறனாளி அணிகள் பங்கேற்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |