2024 - T20 உலகக் கிண்ணம்: அபார வெற்றியடைந்த இந்தியா
புதிய இணைப்பு
உலக கிரிகெட் ரசிகர்கள் பொறுமையிழந்து காத்திருந்த 2024 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றது.
2024 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.
இதன்போது, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் நாட்டின் பார்படோஸ் - Bridgetown மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, இந்திய அணி சார்பில் விராட் கோலி (Virat Kohli) அதிகபட்சமாக 76 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், அக்சர் படேல்(Axar Patel) 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் கேசவ் மகாராஜ் (Keshav Maharaj) மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே (Anrich Nortje) தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்நிலையில், தென்னாபிரிக்க அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியுற்றது.
அதன்படி, 9 ஆவது ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி தன்வசமாக்கியது.
முதலாம் இணைப்பு
உலகிலுள்ள கிரிக்கட் இரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 2024 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியானது, இன்று இரவு 8.00 மணிக்கு மேற்கிந்திய தீவுகள் நாட்டின் பார்படோஸ் - Bridgetown மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
நாணய சுழற்சி
இந்நிலையில், நாணய சுழற்சியில் இந்திய அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இறுதி போட்டி இடம்பெறவுள்ள மைதானத்தில் இந்த தொடரில் இதுவரை எட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன.
ஓமன்- நமீபியா இடையிலான போட்டி சமநிலையில் முடிந்து சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. ஸ்கொட்லாந்து - இங்கிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
ஏனைய ஆறு போட்டிகளில் மூன்று போட்டிகளில் முதலில் துடுப்பாடிய அணியும், ஏனைய 3 போட்டிகளில் இரண்டாவதாக துடுப்பாடிய அணியும் வெற்றி பெற்றுள்ளன.
பொதுவாக இந்த மைதானத்தின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்துள்ளன. கடைசியாக இங்கிலாந்து- அமெரிக்கா இடையிலான போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
என்றாலும் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 ஓவரில் 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி தொடர்ச்சியாக 8 வெற்றிகளையும், இந்திய அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளிலும் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.