வரவு செலவுத் திட்டத்தில் அரச, தனியார் ஊழியர்களுக்கு சலுகைகள்! கடவுச்சீட்டு, வீசா கட்டண அதிகரிப்பு..! (Live)
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை...
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் தொடர்பான பேச்சுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான நாணய நிதித்துடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. நாம் புதிய பாதையில் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் பொருளாதாரத்தை ஸ்திரமடைய செய்ய முடியும் என எதிர்பார்க்கிறோம். நாம் எங்கே தவறு செய்தோம்? எங்கே தவறு நிகழ்ந்தது என்பது பற்றி ஆராய வேண்டும். இன்று எங்களது நாட்டின் தனி நபர் வருமானம் 3815 டொலர்கள் ஆகும்.
கட்சி பேதமற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டியதே எமது பொறுப்பாகும். நாட்டின் நீண்ட கால அபிவிருத்திக்கு பிரபலமான தீர்மானங்களா நியாயமான தீர்மானங்களா என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
கடந்த காலங்களில் நியாயமான தீர்மானங்களினாலேயே ஓரளவுக்கு அபிவிருத்தியை அடைய முடிந்தது. நமது சிந்தைனையோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நிவாரணம் பெற்றுக் கொள்ளவே மக்கள் பழகியுள்ளார்கள். அதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் மக்களை பழக்கப்படுத்தி விட்டனர். நாட்டில் காலத்துக்குத் தேவையான மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை.
அரசியல் இலாபத்துக்காக ஏராளமான நிதி செலவிடப்பட்டுள்ளது. இவை உலக நாடுகளில் கடன் பெற்று செய்யப்பட்டது. எங்களால் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்பதை விடுத்து நாடு எங்களுக்கு என்ன செய்தது என்றுதான் எம்மில் பலர் சிந்திக்கிறோம்.
அரசியல் நோக்கங்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் வருமானத்தில் அவை முன்னெடுக்கப்படவில்லை. மாறாக, சர்வதேச கடன்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டன.
இளைஞர்கள்
நமது நாட்டின் தேசிய சொத்து இளைஞர்களே. அந்த சொத்துகளை பாதுகாக்க இதுவரை எடுத்த நடவடிக்கைகளால் நாம் திருப்தியடைய முடியுமா? அப்படியானால் அவர்கள் ஏன் வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சிக்கிறார்கள்?
தேசிய வளமாக கருதப்படும் இளைஞர்களுக்கான கல்வி, சமூக, பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த வேலைத்திட்டங்கள் திருப்திகரமானதாக இல்லை. நாம் புதிய பொருளாதார முறையையை இளைஞர்களின் எதிர்காலத்துக்காகவே உருவாக்குகிறோம்.
இளைஞர்களின் எதிர்காலத்துக்காக நவீன பொருளாதார முறைமையை உருவாக்க எதிர்பார்க்கிறோம். நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே கடந்த காலங்களில் மக்கள் போராடினார்கள்.
உலகத்துடன் தொழிநுட்ப தொடர்பாடல்களை வலுப்படுத்தக் கூடிய வகையில் முறைமையொன்றை உருவாக்க வேண்டும். தனிப்பட்ட தரப்பினருக்கான பொருளாதார கொள்கைகளுக்கு அப்பால், ஒட்டு மொத்த சமூகத்தையும் இலக்காக கொண்ட பொருளாதார திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இளைஞர், யுவதிகள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தனிநபர் வருமானத்தை உயர்த்த வேண்டும்.
தற்போதுள்ள இலவச கல்வி, மருத்துவ முறைமையில் அனைத்துத் தரப்பினரும் நலன்பெறுகிறார்களா என்று பார்க்க வேண்டும். இலவசக் கல்வி, சுகாதாரம் என்பவற்றினூடாக மக்களுக்கு முழுமையான சேவை கிடைக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
பொருளாதாரம்
ஏற்றுமதியை மூலமாகக் கொண்ட பொருளாதாரம், சுற்றாடலை மையப்படுத்திய பொருளாதாரம் மற்றும் டிஜிட்டலை மையப்படுத்திய பொருளாதாரம் ஆகியவை குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும்.
ஏற்றுமதியை மூலமாகக் கொண்ட பொருளாதாரம், சுற்றாடலை மையப்படுத்திய பொருளாதாரம் மற்றும் டிஜிட்டலை மையப்படுத்திய பொருளாதாரம் ஆகியவை குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு புதிய வழிமுறைகளை ஆராய வேண்டும்.
கல்வி, சுகாதார, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட சகல துறைகளையும் நவீன மயப்படுத்த வேண்டியது அவசியமாகும். நீண்ட சமூக நல்லிணக்கத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். 7 - 8 சதவீத பொருளாதார அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இளைஞர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவக்க வேண்டும். இந்த வரவு - செலவுத்திட்டம் சம்பிரதாய பாதீட்டிலிருந்து வேறுபட்டதாகும். இனிமேலும் தவறான பாதையில் செல்ல எங்களால் முடியாது. எங்களது பலத்தைக் கொண்டு நாம் சுயமாக எழுந்து நிற்க வேண்டிய தேவையை அடிப்படையாகக் கொண்டு வரவு- செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு அமைவாக வரவு - செலவுத்திட்டத்தை நாம் முன்வைக்கவில்லை. எமது கடமையை நாம் நாட்டுக்காக செய்வோம். பொதுவாக பொருட்களின் விலை குறைப்பு, நிவாரணம் போன்றவற்றையே வரவு செலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கிறோம்.
அதனையே காலங்காலமாக செய்து வருகிறோம். வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் போயுள்ளமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும். சர்வதேச வர்த்தகத்திலிருந்து இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காக உலக சந்தையில் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
விவசாயத்துறை
சர்வதேச மற்றும் ஆசிய நாடுகளுடன் தொடர்ச்சியான வர்த்தக தொடர்புகளை முன்னெடுக்கவும் கலந்துரையாடவும் எதிர்பார்க்கிறோம். முதலீட்டுக்கான சுற்றுச்சூழலை உருவாக்குவது அவசியமாக காணப்படுகின்றது. இதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. விவசாயத்துறைக்கு தனியான சட்டம். அதற்காக தொழிற்சங்கங்கள், தனியார் உரிமையாளர்கள் ஆகியோர் உள்வாங்கப்படுவர்.
பரிச்சயமான சமூக வாழ்க்கை முறையானது மீண்டும் கீழ்மட்டத்திற்கு வீழ்ச்சியடையாத வகையில் புதிய பயணம் ஆரம்பிக்கப்படும். நவீன விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்படும்.
கருவா உற்பத்தி மேம்பாட்டுக்கு தனியான திணைக்களம் உருவாக்கப்படும். அதற்காக 200 மில்லின் ரூபா ஒதுக்கீடு. சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத்திட்டங்களுக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. அரச மற்றும் தனியார் துறையிலுள்ள அனுபவம் வாய்ந்தவர்களின் பங்குபற்றலுடன் புதிய தேசிய அபிவிருத்தி குழு நியமிக்கப்படும்.
கல்வி
கிராமிய பாடசாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்கு 130 மாகாண பாடசாலைகள், 20 தேசிய பாடசாலைகளுக்கு 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. வைத்தியர்களுக்கு பட்டப்படிப்பு மேற்கொள்ள பேராதெனிய, றுகுணு பல்கலைக்கழகங்களுக்கு 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. உயர்தரத்தில் சிறந்த சித்தியைப் பெறும் 75 மாணவர்களுக்கு வெளிநாடுகளில் புலமைப்பரிசில்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் புதிய வைத்திய பீடம். 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. அரச சேவை பிரிவு தொடர்பில் பரிசீலனை செய்ய புதிய ஜனாதிபதி குழு நியமனம்.
வரி மறுசீரமைப்பு
வரி மறுசீரமைப்பு தொடர்பில் புதிய ஜனாதிபதி குழு நியமனம். தரவுகள் பாதுகாப்பு அதிகார சபையொன்றை உருவாக்குவது அவசியமாகும்.
அதனடிப்படையில் தரவுகளை முகாமைத்துவம் செய்ய வேண்டும். தரவுகள் பாதுகாப்பு அதிகார சபையை உருவாக்குவதற்காக சுயாதீனமான பொறிமுறை.
அரச மற்றும் தனியார் ஊழியர்கள்
தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியமொன்றை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி சலுகைகள் போன்று தனியார் துறையினருக்கும் அத்தகைய காப்புறுதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச சேவையாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அடுத்த வருட இடைநடுவில் நிவாரணம்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதுடன் 2023 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளோம். அரச ஊழியர்களுக்கு 2023ஆம் ஆண்டு இறுதியில் சலுகைகள் வழங்க நடவடிக்கை, தனியார் துறைக்கும் வழங்க ஆலோசனை.
அரச வருவாயில் பெரும் பகுதி அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கே செலவிடப்படுவதால் அபிவிருத்திப் பணிகளுக்குப் பணத்தை ஒதுக்குவது சவாலாகியுள்ளதால் தற்போதைய தேவைக்கேற்ப அரச சேவைகளை வழங்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படுகிறது.
52 அரச நிறுவனங்களினால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது.
கட்டண அதிகரிப்பு
கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணம் உட்பட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தொடர்பான பல கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.
மாணிக்கக்கல்
மாணிக்கக் கல் விற்பனையை மேம்படுத்துவதற்காக புதிய வலயம் உருவாக்கப்படும். இரத்தினக்கல் தொடர்பான தொழிற்பயிற்சி ஊக்குவிக்கப்படும்.
முதலீட்டு ஊக்குவிப்புக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சமுர்த்தி
சமுர்த்தி வேலைத்திட்டத்தினூடாக நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட நிவாரணம்.
சிறுவர்களின் போசாக்கு
சிறுவர்களின் போசாக்குக்காக தனியான நிதி ஒதுக்கீடு.
கலால் திணைக்களம்
கலால் திணைக்களத்துக்கு பரிசோதனைகளுக்கென நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
அந்நியச் செலாவணி
அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 03 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியை நேரடி முதலீடாக பெறுவதற்கான திட்டங்கள்.
விவசாய கிராமங்கள்
புதிய 10 விவசாய கிராமங்கள் உருவாக்கப்படும்.
காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்
காலநிலை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. விவசாயத்துக்குள் இளைஞர்களை உள்ளீர்க்க 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வெளிநாட்டு மூலங்கள் மற்றும் அரசாங்கத்தின் உதவியைக் கொண்டு சமய தளங்களுக்கான சூாிய சக்தி பெனல்களை வழங்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இளைஞர்களை பயிற்றுவிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்கு 50 மில்லின் ரூபா ஒதுக்கீடு. சிறைச்சாலைகளில் கைதிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்த 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பதுளை, குருநாகல், பொலன்னறுவை வைத்தியசாலைகள் போதனா வைத்தியசாலைகளாக மாற்றப்படும். எங்களுக்கு மக்கள் சவால்களை முன்வைத்திருக்கிறார்கள். முகத்தை மாற்றும் அரசியலைத் தவிர்த்து முறைமையை மாற்றும் பொறிமுறையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நாட்டை உயர்த்தும் புதிய முயற்சிக்கு செயல்வடிவிலான பங்களிப்பை வழங்குமாறு அனைவரிடமும் கோருகிறேன்.
மூன்றாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியிருந்தது.
இதனை தொடர்ந்து ஜனாதிபதியும், நிதி அமைச்சருமாகிய ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.
இதன்பின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் ஆரம்பமாகியுள்ளன.
இரண்டாம் இணைப்பு
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
2023ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் 1.30 இற்கு நாடாளுமன்றில் பாதீட்டினை சமர்ப்பித்து உரையாற்ற ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் பாதீட்டு உரை மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
பின்னர் குழுநிலை விவாதம் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 8ஆம் திகதி வரை நடத்தப்படும்.
பாதீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பாதீட்டில் எதிர்வரும் நிதி ஆண்டுக்கான அரச செலவீனமாக 7,885 பில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க இன்று (14.11.2022) பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
வரவு செலவுத்திட்டம்
இந்த வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர்த்து டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இதற்கமைய வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கு 7 நாட்களும் வரவு செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்திற்கு 13 நாட்களுமென 20 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறுவதுடன் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வாழ்க்கை செலவுகள் மிகவும் அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அடுத்த வருடத்திற்கு வரவு செலவுத்திட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வரவு செலவு திட்டம்
அதன்படி புதிய வரிகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், அரச செலவுகள் குறைக்கப்படலாம் என பலரும் கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் அதற்கான தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படலாம். இதனால் தைரியமான சில முடிவுகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்த அறிவிப்புகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு சீர்திருத்த வரவு - செலவுத் திட்டமாக இருக்கலாம் என்பதே பலரதும் கணிப்பாக இருக்கிறது.
இதேவேளை வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பை முன்னிட்டு கடந்த வருடங்களைப் போன்று இம்முறையும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றில் அறிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நிதி இராஜாங்க அமைச்சரின் தகவல்
இலங்கையின் வரலாற்றில் மிகவும் சவால் மிக்க வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார ரீதியில் நாட்டை ஸ்திரப்படுத்துவதே ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் எதிர்நோக்கும் பிரதான சவால். நபர் ஒருவர் ஒரு மாதம் வாழ்வதற்கு 13000 ரூபா தேவை என அரசாங்க அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் அரசாங்கம் நலன்புரி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளது. அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாட்டை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பிக்கின்றார்.
நாட்டில் 70 வீதமான மக்கள் வாழ்வதற்கு அரசாங்கத்திடம் நிவாரணங்களை கோரும் பின்னணியில் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
