ஜனவரியில் 20 கொலை சம்பவங்கள்-பொலிஸ் ஊடகப்பிரிவு
2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 18 ஆம் திகதி வரையான காலத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த 20 பேரில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக இந்த கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
அதேவேளை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையான காலத்தில் நாடு முழுவதும் 516 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இவற்றில் 458 சம்பவங்கள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காலப்பகுதியில் நடந்த மோதல் சம்பவங்களில் 731 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவற்றில் 638 சம்பவங்கள் தொடர்பில் தீர்வு காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பாக சம்பவங்கள் நடந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் சிறப்பு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.