கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
கிளிநொச்சி - தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்று(07.02.2026) முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
வாகனங்கள் பறிமுதல்
கல்லாறு பகுதி மணல் அகழ்வுக்கு முற்றாக தடை செய்யப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனின், அந்த பகுதி வன விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் காணப்படுகிறது.

இருப்பினும், சிலர் சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய இரண்டு டிப்பர் வாகனங்கள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் தருமபுர பொலிஸார் விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.
அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட தடயப் பொருட்கள் எதிர்வரும் 11ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
