ஜப்பானை நோக்கி நகரும் இரு பேரிடர்கள்..! தாய்வானில் கனமழை எச்சரிக்கை
“மெக்கலா“ மற்றும் “ஹிகோஸ்” ஆகிய இரு வெப்பமண்டலப் புயல்கள் அடுத்தடுத்து நெருங்கி வருவதால், ஜப்பான் நாடு முழுவதும் கடுமையான போக்குவரத்து முடக்கத்தையும் பேரிடர் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டுள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக அங்குள்ள 10 இலட்சம் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.
மெக்கலா புயல்
இந்த மோசமான வானிலை காரணமாக 200- க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், டஜன் கணக்கான தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பல அதிவேக வீதிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, கியூஷு பகுதியில் உள்ள தனது தொழிற்சாலையின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அத்துடன், ஜப்பானை நோக்கி நகரும் மெக்கலா புயல், அதற்கு முன்னதாக தாய்வான் தீவைச் சூறையாடிச் சென்றுள்ளது.
தாய்வானில் கொட்டித்தீர்த்த மழை
தாய்வானில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் சுமார் 60 இலட்சம் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள கயோசியுங், பிங்டங் மற்றும் டைனன் ஆகிய மூன்று தெற்குப் பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான டிஎஸ்எம்சி அமைந்துள்ள சின்சு நகரிற்கு மதியத்திற்கு மேல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில கிராமப்புறப் பகுதிகளில் 1 மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளதுடன், மலையிலிருந்து நீர் பெருக்கெடுத்து வருவதால் உடைப்பு ஏற்படும் அபாயமுள்ள தடுப்பு ஏரிகளின் கீழ்நிலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.