நீண்டகால ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் இருவர் கைது
நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(10.08.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்படோர்
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2,400 மில்லிகிராம் மற்றும் 2,970 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருட்களுடன், போதைப்பொருளை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மைக்ரோ ரக நவீன இலத்திரனியல் தராசு ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தக் கைது நடவடிக்கையின் போது கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரும் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர்கள் இருவரையும் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.