கடல் அலையில் சிக்கி 19 வயதான இளைஞர் உயிரிழப்பு - தங்காலையில் துயரம்
அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை, மாவெல்ல கடற்பரப்பில் காணாமல்போன இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்காலை, கொடெல்லவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தீவிர தேடுதல் நடவடிக்கை
கடந்த வியாழக்கிழமை மாவெல்ல - மஹகலாகாவ கடற்கரைப் பகுதியில் தூண்டில் போட்டு மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எழுந்த கடல் அலையில் சிக்கி அவர் இழுத்துச்செல்லப்பட்டிருந்தார்.

காணாமல்போன இளைஞரைக் கண்டறிய பிரதேச மக்கள், பொலிஸ் உயிர்பாதுகாப்புப் பிரிவு மற்றும் கடற்படையினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று பிற்பகல் மாவெல்ல கடற்பரப்பில் சடலம் மிதப்பதைக் கண்ட மீனவர்கள், அதனைப் படகு மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.