படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)
2004ம் ஆண்டு மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - காந்தி பூங்கா முன்பாகவுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் நடைபெற்றது.
மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் கிழக்கு மாகாணசபைத் தவிசாளரும், டெலோவின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா, உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் அமரர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக் குழுவொன்றினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டமையும், அவருக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : குமார்
வவுனியா
வவுனியாவில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா ஊடக அமையில் இன்று (31) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
ஊடகவியலாளர் பணி நிமித்தம் சென்ற போது மட்டக்களப்பில் கடந்த 2004 ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
ஊடக அமையத்தின் தலைவர் பரமேஸ்வரன் கார்த்திபன் தலமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வு ஒரு நிமிட அக வணக்கத்துடன், ஆரம்பமாகி ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவ படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன் தொடர்ந்து மெழுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
செய்தியாளர் : திலீபன்
முல்லைத்தீவு
படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் 'நாட்டுப்பற்றாளர்'ஐயாத்துரை நடேசனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (31)முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த 2004 ஆண்டு இதே நாளில் மட்டகளப்பில் வைத்து ஆயுததாரிகளால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
செய்தியாளர் : குமணன்
மட்டக்களப்பு
நடேசன் படுகொலை செய்யப்பட்டு 18 வருடங்களாகியும், அவரைப் படுகொலை செய்தவர்கள் மிகவும் சுதந்திரமாக, இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற கொடிய ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது மிகவும் வேதனையானதும், இந்த நாட்டின் நீதியின் மேலுள்ள கலங்கமுமாகவே பார்க்கப்படுகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாhளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐ.நடேசன் அவர்களின் 18வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊகவியலாளர்களின் சுதந்திரத்திலே தலையிடாமல் படுகொலை செய்யப்பட்ட நடேசன் உள்ளிட்ட ஏனைய பத்திரிகையாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களை நீதியின் முன்நிறுத்தி ஊடகவியலாளர்களுக்கு நியாயபூர்வமான தீர்வினை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.