வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு: மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தகவல்
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல்
முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக வன்னி (Vanni) மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், வவுனியா (Vavuniya) அரச
அதிபருமான பீ.ஏ. சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இதுவரை வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் எட்டு முறைப்பாடுகளும், மன்னார் மாவட்டத்தில் எட்டு முறைப்பாடுகளும், முல்லைத்தீவில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளது.
வாக்களிப்பு நிலையங்கள்
அவை சிறிய முறைப்பாடுகளாகவே உள்ளன. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வன்னி மாவட்டத்தில் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
அந்தவகையில், வவுனியாவில் 182, மன்னாரில் 98, முல்லைத்தீவில் 137 நிலையங்களும் அமைக்கப்படும். அதேவேளை, வவுனியாவில் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக சைவப்பிரகாச மகளிர் கல்லூரியும், மன்னார் மாவட்டத்தில் மாவட்டச் செயலகமும், முல்லைத்தீவில் முல்லைத்தீவு மத்திய மகாவித்தியாலமும் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 30,6081 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அதற்கமைய வவுனியாவில் 128,585 பேரும், முல்லைத்தீவில் 86,889 பேரும், மன்னாரில் 90,607பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.