லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதியை நிலைநாட்டுங்கள்: சஜித் கோரிக்கை
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்ற நிலையில், உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்தக் கொலைக்கான மூல காரணத்தையும், கொலைகாரர்களையும் இதுவரை எந்த அரசாலும் கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளன.
கொடூரத் தாக்குதல்
இந்த விவகாரத்தை அவரது மகள் அஹிம்சா விக்கிரமதுங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்துச் சென்றுள்ளார்.
அத்துடன், தனியார் ஊடகம் ஒன்றின் மீதும், கொடூரத் தாக்குதல் இடம்பெற்றும் 16 வருடங்கள் கடந்துள்ளன.
லசந்த விக்கிரமதுங்க மற்றும் இராஜமகேந்திரன் ஆகியோர் நீதி மற்றும் நியாயத்திற்காக முன் நின்றார்கள்.” என்றார்.
ஹர்ஷன நாணயக்கார
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார(Harshana Nanayakkara ),
“சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்.
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பில் நீதி, நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் கூறினார்.
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை விவகாரத்துக்கு நீதியை நிலைநாட்டுவோம்.
அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அரசு என்ற வகையில் நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். கடந்த காலங்களில் வழக்குகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன” என்றார்.
மேலும், படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16ஆவது நினைவேந்தல் மற்றும் நீதிகோரிய போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது.
ஊடக அமையம்,மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
மட்டக்களப்பு ஊடக அமையம்,மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஸ்ணகுமாரின் ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் க.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரன், பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
செய்தி - குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |