மாகோலா குழந்தைகள் தடுப்பு மையத்திலிருந்து 15 குழந்தைகள் தப்பியோட்டம்
சப்புகஸ்கந்தாவில் உள்ள மாகோலா குழந்தைகள் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 குழந்தைகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
14 முதல் 17 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகள் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த குழந்தைகள் தடுப்பு மையத்தில் இருந்து தப்பிச் சென்றதாக தடுப்பு மையத்தின் அதிகாரி நேற்று(28) பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.
குற்றங்கள்
இந்த குழந்தைகளுக்கு மேல் மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அந்த அதிகாரி பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுகள், கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் கலவரத்திற்கு உதவுதல் போன்ற குற்றங்களுக்காக இந்த குழந்தைகள் நீதிமன்றங்களால் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழந்தைகள் பொரளை, பண்டாரகம, மாளிகாகந்த, மட்டக்குளிய, வெல்லம்பிட்டிய, அகுலான, பெம்முல்ல, கொழும்பு 14 போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



