பதினைந்து வீத பேருந்துக் கட்டண அதிகரிப்பு! தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை
வருடாந்த பேருந்துக் கட்டண அதிகரிப்பின் கீழ் பதினைந்து வீத கட்டண அதிகரிப்பை அனுமதிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வருடந்தோறும் திருத்தியமைக்கப்படும் பேருந்துக் கட்டண அதிகரிப்பை ஜூலை முதல் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் செயற்படுத்துமாறு, தனியார் பேருந்து சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
உரிமையாளர்கள் கோரிக்கை
இந்தக் கோரிக்கை எழுத்துப்பூர்வமாக விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஐந்து நாட்களுக்குள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கட்டணத் திருத்தம் குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஊடகங்களிடம் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
15% முதல் 20% வரை கட்டண உயர்வை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். கடந்த சில நாட்களாக நாங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறோம். டொலர் மற்றும் பிற செலவுகள் அதிகரித்துள்ளன.
டீசல் விலை
பேருந்துத் தொழில் கடுமையான நெருக்கடியில் உள்ளது. ஒரு மாதமாக நாங்கள் சிரமத்துடன் இயங்கி வந்தோம். அடுத்த 6 மாதங்களில் டீசல் விலை குறைந்தாலும், பேருந்துக் கட்டணங்களைக் குறைக்க மாட்டோம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

சுமார் 300 வகையான பேருந்துக் கட்டணங்கள் உள்ளன, அவை அனைத்தும் அதிகரிக்கப் போகின்றன.
இது திருத்தம் அல்ல, இது ஒரு அதிகரிப்பு. குறைந்தபட்சக் கட்டணம் குறைந்தது 35 அல்லது 40 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.