சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்(Video)
யாழ்ப்பாண கடற்பிராந்தியத்தில் உள்நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். காரைநகர் - கோவளம் கடற்பரப்பில் உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களும் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால், ஒரு படகுடன் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 14பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அவர்கள் 14பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் 12 கடற்றொழிலாளர்கள் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இரு கடற்றொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கைதான 14 இந்திய கடற்றொழிலாளர்களில் இருவர் கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், கடற்படையினர் இரும்புக் கம்பியால் தங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்று காயமடைந்த இரு கடற்றொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |