13ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஏன் பிரதமரிடம் கேள்வி கேட்டீர்கள்..! ஊடகவியலாளரிடம் விவாதம் (Video)
நாடாளுமன்றத்துக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை விவாதத்துக்கு கொண்டுவரட்டும் அதன்போது பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பார்க்கலாம் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
"புதிய கிராமம் - புதிய நாடு" தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று(04.08.2023) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது 13 வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதியால் கொண்டுவரப்பட்ட உள்ளது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஏன் கேள்வி கேட்டீர்கள்?
பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தும் சில தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்ற நிலையில் இதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் என்று மேலும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இவை எல்லாத்துக்குமே இந்த 13வது திருத்தச் சட்டம் முதலில் நாடாளுமன்றத்துக்கு விவாதத்திற்கு வரட்டும் வரும்போது பார்க்கலாம் என பிரதமர் பதில் அளித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த இரண்டு கேள்விகளையும் கேட்ட ஊடகவியலாளரை பிரதமரின் ஊடகப் பொறுப்பாளர் ஒருவர், பிரதமரிடம் ஏன் கேள்வி எழுப்பினீர்கள் என்று வினவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு பதிலளித்த ஊடகவியலாளர், இது மட்டக்களப்பு மாவட்டம், எவர் வந்தாலும் எங்களது மக்களது பிரச்சினைகளை நாங்கள் கேட்பதற்கு தயாராக இருக்கின்றோம். ஆகவே யார் வந்தாலும் ஊடகவியலாளர் என்ற ரீதியில் கேள்வி எழுப்ப நாங்கள் தயங்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பல பிரச்சினைகள் உண்டு
அதற்கு பதில் அளித்த பிரதமரின் ஊடகப் பொறுப்பாளர்,13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக கொழும்பில் கேட்க வேண்டும் என பதிலளிக்க, குறித்த ஊடகவியலாளர் கொழும்பில் கேட்பது கேட்காமல் விடுவதும் அவர்கள் விருப்பம்.
மட்டக்களப்பை பொறுத்தவரையில் குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழும் வடகிழக்கை பொறுத்தவரையில் மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றது. ஆகவே ஊடகவியலாளர்களாகிய நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய தேவைப்பாடு இல்லை.
உங்களால் முடிந்தால் நீங்கள் உங்களது பாணியில் செய்தியை பிரசுரிக்கலாம். எங்களுக்கு தேவையானது எமது மக்களின் பிரச்சினை தொடர்பான செய்திகள் ஆகவே பிரதமரோ ஜனாதிபதியோ எவர் வந்தாலும் ஊடகமும் ஊடகவியலாளரும் தன் கடமையைச் சரியாக செய்யும் என பிரதமரின் ஊடக பொறுப்பதிகாரிக்கு கடினமான தொணியில் மட்டக்களப்பு ஊடகவியலாளர் பதிலளித்ததாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



