பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் அடிப்படை சம்பளம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும்,கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1350 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில்,மீகுதி 350 ரூபாயும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்களுக்கும் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று முதல் 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொழும்பில், இன்று சம்பள நிர்ணய சபையுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் என மார்தட்டிக்கொண்ட, அதாவது 1350 அடிப்படை சம்பளமும், 350 ரூபாய் ஊக்குவிப்பு தொகையும் வழங்கப்படும் என கூறிய அரசாங்கத்துக்கு இது ஒரு பின்னடைவான முடிவு அல்லவா? என ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதம சட்ட ஆலோசகர் கா. மாரிமுத்து, ''இது வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு சம்பள நிர்ணய சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும்.
தோட்ட தொழிலார்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த அம்சம் இன்று முதல் நடைமுறையாகும். மேலும் இது தொடர்பிலான வர்த்தமானி விரைவில் வெளிவரும்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |