300 மில்லியன் ரூபாய் செலவில் 134 கெப் வண்டிகள் வழங்கி வைப்பு - உதவி கரம் நீட்டிய இந்தியா
இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு நன்கொடையாக 134 கெப் வண்டிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வண்டிகள் அடங்கிய தொகுப்பு, இந்திய அரசாங்கத்தினால் நேற்று(25.05.2026) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
300 மில்லியன் ரூபாய் நன்கொடை
சுமார் 300 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இந்த நன்கொடையானது, வடக்கு மாகாணத்தில் பொலிஸ் திணைக்கள சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அந்த பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

எதிர்காலத்திலும் இலங்கைக்கு இந்தியா இதேபோன்ற உதவிகளைத் தொடர்ந்து வழங்கும் என்று இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது உறுதியளித்துள்ளார்.
இந்த நன்கொடைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, இந்திய உயர் ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதி அமைச்சர் சுனில் வடகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

