உறவுகளைத் தேடிய 125 உறவுகள் இதுவரை உயிரிழப்பு
வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் உறவுகள் பல்வேறு பிரச்சினைகளை நீண்ட காலமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து பல துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிப காலங்களில் நோய்வாய்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்து 125 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 17 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா
இதற்கமைய, வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (16.12.2022) பதிவாகியுள்ளது.
வவுனியா - கல்மடு பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மகன் இராமச்சந்திரன் செந்தூரன் கடந்த 2007ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்டுள்ளார்.
மகனைத் தேடி வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக் கண்டறியும் தமிழர் தாயக சங்கத்தின் உறுப்பினராகத் தீவிர பங்களிப்பு வழங்கி வந்த நிலையில் மகனைக் கண்டுபிடித்துத் தரப் போராடியுள்ளார்.
அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக்குழுக்களின் கூட்டு முயற்சியால்
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாகத் தேடி அலைந்து,
உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற குறித்த,
தாயார் நோய் காரணமாக மகனைக் காணாமலேயே மரணமடைந்துள்ளார்.