அரசின் நிலக்கரி இறக்குமதியில் 462 கோடி ரூபா பெறுமதியான நிலக்கரி மாயம்! சபையில் தெரிவித்த நாமல்
அரசின் பொய் வாக்குறுதிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கடுமையாகச் சாடி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "அரசால் கொண்டுவரப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களில் சுமார் 1,20,000 மெட்ரிக் தொன் நிலக்கரி காணாமல் போயுள்ளது. இதன் சந்தை மதிப்பு 462 கோடி ரூபாவாகும்.
இரண்டு நிலக்கரி கப்பல்களின் அளவுக்கு இணையான இந்த இழப்புக்கு யார் பொறுப்பு? அரசு வாங்கிய பின்னரே நிலக்கரியைச் சாப்பிட்டுள்ளதா?
பணவீக்கத்துக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்றும், 10 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், இன்று செவனகல தொழிற்சாலையின் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு, சம்பளம் குறைக்கப்பட்டு, தொழிற்சாலையே மூடப்பட்டுள்ளது.
30 ரூபா கூடுதல் வரி
குறைந்த காலத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என உறுதியளித்துவிட்டு, 6 ஆயிரம் ரூபாவாக இருந்த கட்டணத்தை தற்போது 8 ஆயிரம் ரூபாவாக உயர்த்தியுள்ளனர்.

எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படும் எனக் கூறிவிட்டு லீற்றருக்கு 30 ரூபா கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் வரியும் நீக்கப்படவில்லை.
150 ரூபாவுக்கு நெல் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறிய போதிலும் உரமும் தண்ணீரும் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை. அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது எனக் கூறிவிட்டு தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது.
பட்டதாரிகளுக்கு 35 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனக் கூறி அவர்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திவிட்டு அரசு கைவிட்டுவிட்டது. நாட்டின் நிதி அமைச்சிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஜனாதிபதி கூறினாலும், கிராமங்களில் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் நடைபெறவில்லை.
ஹேக்கர்கள் மூலம் 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல்போயுள்ளன. துறைமுகத்தில் 323 கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் கொள்கலனைக் கைப்பற்றிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவே விசாரணை நடத்தப்படுகின்றது.
அரசின் பொய்கள், ஊழல்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று கட்சி பேதமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். நீதிமன்றம், சிறைச்சாலை அல்லது அடக்குமுறைகளைக் காட்டி இந்த மக்கள் போராட்டத்தை அரசால் தடுத்து நிறுத்த முடியாது." என்றார்.