போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக முன்வைக்கப்படும் 12 பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் முன்வைத்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எமது நாடு, மதுசாரம், புகைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் பொருளாதார, சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
புகைத்தல் மற்றும் மதுசார பாவனையினால் தினமும் சுமார் 100 அகால மரணங்கள் ஏற்படுகின்றன.
சிகரட் வரி
இலங்கையில் தடுக்கக்கூடிய 10 மரணங்களில் 8 மரணங்கள் தொற்றா நோய்களால் (NCD) ஏற்படுகின்றன. தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான 04 காரணங்களுள் இரு முதன்மை காரணங்களாக புகைத்தல் பாவனை மற்றும் மதுசார பாவனை காணப்படுகின்றன என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில், தனிநபர்கள் புகைத்தல் மற்றும் மதுசார பாவனைக்காக தினமும் 121 கோடி ரூபாவை செலவிடுகின்றனர்.
புகைபிடித்தல் மற்றும் மதுசார பாவனையானது ஒரு நாட்டிற்கு வருமானமீட்டக கூடிய பொருட்கள் அல்ல, எமது நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டில் 165 பில்லியன் ரூபா கலால் வரியாக வசூலிக்கப்பட்டுள்ள போதிலும், அதே வருடத்தில் மதுசார பாவனையால் நாட்டிற்கு ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவீனம் 237 பில்லியன் ரூபாவாகும்.
சிகரட் வரி (Source - Investment Case For Alcohol Control In Sri Lanka 2022- UNDP) மேலும், 2016ஆம் ஆண்டு அரசாங்கம் 88 பில்லியன் ரூபாவை சிகரட் வரியாக வசூலித்த போதிலும், சிகரட் பாவனையினால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவு 214 பில்லியன் ரூபா என ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன(Source - Investment Case For Alcohol Control In Sri Lanka 2022- UNDP).
எனவே, பயனுள்ள கட்டுப்பாட்டுக் கொள்கைகளை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களின் பாவனைகளால் ஏற்படும் பொருளாதார, சுகாதார மற்றும் சமூக பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது.
நிறைவேற்று அதிகாரம்
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் தத்தமது விஞ்ஞாபனம் முன்வைக்கப்படும்.
அவ்விஞ்ஞாபனத்தில் மதுசாரம், புகைப்பொருள் மற்றும்
போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்காக இணைத்துக்கொள்ளக்கூடிய 12 பரிந்துரைகளை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் முன்வைக்கின்றது. இப்பரிந்துரைகள் தொடர்பான விரிவான தகவல்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது." என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |