குளவி கொட்டுக்கு இலக்கான 12 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
லிந்துலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி 12 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், இன்று(24.10.2026) லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தின் கேனஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாகப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
12 வைத்தியசாலையில் அனுமதி
குளவி கொட்டுக்கு இலக்காகியவர்களில் 11 பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளியும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட அனைவரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவர்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான்கு தொழிலாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையவர்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடும் போது குளவி மற்றும் ஏனைய பூச்சிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.