பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான 12 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை
யாழ். பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான பன்னிரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனையின் அடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் 9ஆம் திகதி கைதாகிய இந்திய கடற்றொழிலாளர்களின் வழக்கு நேற்று(12.01.2024) எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நீதவான் உத்தரவு
வழக்கில் படகின் உரிமையாளரை பிரதான சந்தேக நபராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த அரச சட்டவாளர் நிஷாந் நாகரட்ணம் மன்றில் முன்னிலையாகி, “படகின் உரிமையாளரை பிரதான சந்தேக நபராக சேர்க்க முடியும்.
2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட புதிய கடற்றொழில், வெளிநாட்டு படகுகளுக்கான சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது” என மன்றுரைத்திருந்தார்.
இதனையடுத்து மன்றுரைத்த விடயதானங்களை ஆராய்ந்த பருத்தித்துறை நீதவான் குறித்த விண்ணப்பத்தை நேற்று(12) கட்டளையாக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதன் போது படகின் உரிமையாளரை முதலாவது சந்தேக நபராக குறிப்பிடப்பட்டு அவருக்கான அழைப்பாணை இலங்கை நீதித்துறை ஊடாக அனுப்புவதற்கும் கட்டளை பிறப்பித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீரியல் வளத்துறையால் 12 கடற்றொழிலாளர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மூன்று குற்றச்சாட்டுகளையும் கடற்றொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுக்கும் தலா ஆறுமாத சாதாரண சிறை தண்டனை என்னுமடிப்படையில் 18 மாத சாதாரண சிறை தண்டனை விதித்த பருத்துத்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை அதனை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளார்.
you may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |