மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகள் 72 பேர் உட்பட 116 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட்டினால் நேற்று திங்கட்கிழமை இருவர் உயிரிழந்துள்ளதாகவும், சிறைச்சாலை கைதிகள் 72 பேர் உட்பட மாவட்டத்தில் 116 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் தொடர்ந்து எழுமாறாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை கோவிட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையில் மட்டக்களப்பு சிறைக்கைதிகள் 72 பேருக்கும், பொலிஸார் இருவருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருக்கும், களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி , காத்தான்குடி ஆகிய இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட மூன்று பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் உட்பட 116 பேருக்குத் தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.