இலங்கைக்கு 113 கோடி அமெரிக்க டொலர் வருமானம்
2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான 11 மாத காலத்தில் சுற்றுலா தொழிற்துறை மூலம் இலங்கைக்கு 113 கோடி அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் மட்டும் 11 கோடி அமெரிக்க டொலர் வருமானம்
நவம்பர் மாதத்தில் மாத்திரம் சுற்றுலா தொழிற்துறை மூலமாக 11 கோடி அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளது. நவம்பர் மாதத்தில் 59 ஆயிரத்து 759 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதுடன் சுற்றுலாப் பயணிகளின் இந்த வருகையானது கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 42 வீத அதிகரிப்பு.
இதனடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த நவம்பர் மாதம் வரையாக காலத்தில் ஆறு லட்சத்து 28 ஆயிரத்து 17 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் தினமும் 1991 சுற்றுலாப் பயணிகள் வருகை
நவம்பர் மதம் தினமும் ஆயிரத்து 991 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன் ஒக்டோபர் மாதம் தினமும் ஆயிரத்து 355 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான 11 மாத காலத்தில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 989 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களின் வருகையால் இலங்கைக்கு 27 கோடி அமெரிக்க டொலர்கள் வருவாயாக கிடைத்தது எனவும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.