யாழில் நூற்றுக்கணக்கான கைக்குண்டுகள் மீட்பு (Video)
யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி, அட்டகிரி பகுதியிலிருந்து 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கைக்குண்டுகள் மீட்பு
குறித்த கைக்குண்டுகள் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நவாலி, அட்டகிரி பகுதியில் காணியொன்றினை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்கு உட்படுத்திய போது சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார்.
இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு உடன் அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதி பெற்று அகழ்வு நடவடிக்கை
இந்த நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்று (14.10.2022) காலை 6 மணிமுதல் யாழ். மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






