பிரான்சில் ஸ்கைடைவிங் விமானம் விபத்து! 11 பேர் உடல் சிதறிப் பலி..
பிரான்சின் வடகிழக்கு பகுதியில் உள்ள டோம்ப்ளெய்ன் நகரில், ஸ்கைடைவிங் எனப்படும் வான்வெளி சாகசப் பயணத்தில் ஈடுபட்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று இன்று(28) காலை திடீரென விபத்துக்குள்ளானதில், விமானி உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இந்த விபத்து நேரிட்டதாக மியூர்த்-எட்-மொசெல்லே பிராந்தியத்தின் ஆளுநர் இவ்ஸ் செகுய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
விமான விபத்து
உயிரிழந்தவர்களில் விமான பைலட்டுடன் சேர்த்து 5 வான் சாகசப் பயிற்சி மாணவர்கள் மற்றும் அவர்களுக்குப் பயிற்சியளித்த 5 பயிற்றுவிப்பாளர்கள் அடங்குவர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் அவசரக் கால மீட்புப் படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் எவ்விதத் தடையுமின்றி விபத்து நடந்த பகுதிக்குச் செல்வதற்காக, டோம்ப்ளெய்ன் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் நிலைமைய நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யச் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக அந்நாட்டு உள்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.