10 ஆவது முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு
மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனுடய சேவையை வழங்குவதனை இலக்காக கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான 10 ஆவது (இரண்டாவது சுற்றின் நான்காவது) முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் மாநாடு நேற்றையதினம் (23) ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கையின் பிரகாரம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரதேச செயலகத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டது.
பிரதேச செயலாளர் மாநாடு
இதன் பிரகாரம் இந்த ஆண்டுக்கான முதல் சுற்று மாநாடு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களிலும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

மீண்டும் இந்த ஆண்டுக்கான இரண்டாவது சுற்றின் நான்காவது பிரதேச செயலாளர் மாநாடு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு வருகைதந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் பிரதேச செயலகத்தின் சுற்றுப்புறச் சூழலை அலுவலக முறைமை என்பவற்றை முதலில் பார்வையிட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற பிரதேச செயலாளர் மாநாட்டில், கடந்த முறை நடைபெற்ற மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் முதலில் கலந்துரையாடப்பட்டன.
விசேடமாக அரசாங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் சமூக நலத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
வரவு செலவுத் திட்டம்
தொடர்ந்து பிரதேச செயலகங்களின் நிர்வாக , நிதி, திட்டமிடல் செயற்பாடுகள், முன்னேற்றங்கள், குறைபாடுகள், சமூக நலச்சேவை செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள், இந்த வருடத்தில் செயற்படுத்த வேண்டிய திட்டங்கள், 2025 வரவு செலவுத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இனங்காணப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக முதலாவது சுற்று பிரதேச செயலாளர் மாநாட்டில் பிரதேச செயலக, மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இம்முறை ஒட்டுசுட்டான் பிரதேச சமூக மட்ட அமைப்புக்களின் (Community-Based Organizations (CBOs)) பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் அமைப்புக்களின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது சிறப்பம்சமாகும்.
இந்த மாநாட்டினை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் நிசாந்தன் அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார். இந்த மாநாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.மஞ்சுளாதேவி (நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெயக்காந்(காணி) மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்ட நலன்புரி நன்மைகள் சபையின் மாவட்ட இணைப்பாளர், மாந்தை கிழக்கு, துணுக்காய், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, முதலான பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், மற்றும் எனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.









பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri