மட்டேகொடையில் பயங்கர தீ விபத்து – ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான சொத்துகள் நாசம்
மட்டேகொட வீடமைப்புத் திட்டத்திற்கு அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் இன்று (23) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துக்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
மோட்டார் சைக்கிள் ஒன்றின் எரிபொருள் தாங்கியைப் பிரித்தெடுக்க முயன்றபோது தீ விபத்து ஏற்பட்டதாக மட்டேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீர் தீ விபத்து
தீப்பற்றிய எரிபொருள் தாங்கியை கடை உரிமையாளர் உடனடியாக கீழே போட்டுவிட்டு, நிலையத்திலிருந்து வெளியேறியதால் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.
கடை உரிமையாளர் வெளியேறிய பின்னர் தீப்பற்றிய எரிபொருள் தாங்கி வெடித்ததாகவும், இதனால் தீ வேகமாகப் பரவியதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை. எனினும், 10 மோட்டார் சைக்கிள்கள், மின்பிறப்பாக்கி மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்கள் உள்ளிட்ட 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துக்கள் முற்றாக அழிந்துள்ளன.
தீ அருகிலுள்ள கடைகளுக்குப் பரவாமல் தடுக்கும் வகையில் மட்டேகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், அப்பகுதி மக்களின் உதவியுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கோட்டே தீயணைப்புப் பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மட்டேகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.