‘‘கடந்த ஆண்டு பதிவாகிய பெண்களுக்கு எதிரான 10600 வன்முறை சம்பவங்கள்’’
இந்த நாட்டில் கடந்த ஆண்டு 10600 பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் இன்று போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலையுள்ளதாகவும் அவர்களை விளையாட்டின் மூலம் அதிலிருந்து மீட்கமுடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்கள் தோறும் ஒரு விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூரில் பொது விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவிடம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லடி வேலூர் பொது விளையாட்டு மைதானத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதற்கென முதல் கட்டமாக விளையாட்டுத்துறை அமைச்சு 5 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது.இதன்மூலம் வெபர் விளையாட்டு மைதானத்திற்கு அடுத்ததாக கல்லடி வேலூரில் பொது விளையாட்டு மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான
து.மதன்,ஜெயந்திரன்,சுபராஜ் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித்
தலைவர் எஸ்.யோகவேள் மற்றும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி
ஆணையாளர் உ.சிவராசா, மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்
ஏ.சுதர்சன், உட்பட கிராம உத்தியோகத்தர்கள், மாநகர சபையின் தொழில்நுட்ப
உத்தியோகத்தர் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என
பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



