நாட்டில் நேற்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தால் 1 பில்லியன் ரூபா இழப்பு
பல முக்கியமான துறைகளின் பணியாளர்கள் நேற்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக, நாடு 1 பில்லியன் ரூபா வருமானத்தை இழந்துள்ளதாக சிரேஷ்ட பொருளாதார நிபுணர்களை கோடிட்டு செய்தித்தாள் ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் புதிய வருமான வரிக் கொள்கைக்கு எதிராக வைத்தியர்கள் மற்றும் பல்வேறு துறையினர் நேற்றைய தினம் (08.02.2023) போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதன் காரணமாக நாட்டுக்கு ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திக்கு பாரிய தாக்கம்
இந்த நெருக்கடியான தருணத்தில் ஏற்பட்ட இந்த இழப்பு இலங்கையின் அபிவிருத்திக்கு பாரிய தாக்கமாகும் என்றும் பிரியங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான எதிர்ப்புக்கள், இலங்கையின் உலகளாவிய பங்காளிகளுக்கு தவறான சமிக்ஞையை அனுப்பியுள்ளதாக மற்றும் ஒரு பொருளாதார நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை மின்சார சபை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இலங்கை துறைமுக அதிகார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, பல வங்கிகள், இலங்கை விமான போக்குவரத்து, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உட்பட 40 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் புதிய வருமான வரிக் கொள்கையை எதிர்த்து நேற்று போராட்டங்களை முன்னெடுத்தன.
இதேவேளை, இந்த போராட்டங்களின் மத்தியில் புதிய உழைக்கும் போதே செலுத்தும் வரியில் சில விலக்களிப்புக்களை அரசாங்கம் அறிவித்தது.
இதன்படி தமது மாத வருவாயில் இருந்து அரச மற்றும் தனியார் பணியாளர்களுக்கு
மருத்துவக்கொடுப்பனவு, வாகனம் உட்பட்ட சில கொடுப்பனவுகளுக்கு விலக்களிப்பு
வழங்கப்பட்டுள்ளது.