மன்னாரில் ஆமை இறைச்சியுடன் மூவர் கைது!
மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதி, நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம்(1.2.2026) அதிகாலை வடமத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, சந்தேகநபர்களிடமிருந்து படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 17 கிலோ ஆமை இறைச்சி மற்றும் 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு படகுடன் குறித்த சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார், நாச்சிக்குடா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் 26 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள், ஆமை இறைச்சி, ஆமை முட்டைகள் மற்றும் படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri