இரண்டு ஆண்டுகள் கடந்தும் புனரமைக்கப்படாத மட்டக்களப்பு சியோன் தேவாலயம்! - அருட்தந்தை ஆதங்கம்
உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுவெடிப்பில் அழிவடைந்த மூன்று தேவாலயங்களில் இரண்டு தேவாலங்கள் இலங்கை அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்டு, நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், கிழக்கில் உள்ள மக்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அழிவடைந்த தேவாலயத்தில் பிரார்த்தனைகளை நடத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு சியோன் தேவாலயம் இதுவரை புனரமைக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் அழிக்கப்பட்ட கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம் மற்றும் கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் ஆகியவை இலங்கை கடற்படையால் விரைவாக புனரமைக்கப்பட்டுள்ளன.
எனினும், மோசமான அழிவினை எதிர்நோக்கிய மட்டக்களப்பு சியோன் தேவாலயம் இரண்டு வருடங்கள் கடந்தும் இதுவரை புனரமைக்கப்படவில்லை என, பொது மக்களும், பக்தர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தபின் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் அருட்தந்தை ரொசான் மகேஷன் தெரிவிக்கின்றார்.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர், புனரமைப்பிற்கு அரசாங்கத்திடம் இருந்து பணம் கிடைக்கவில்லை. அதனாலேலேயே பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடிந்து விழுந்த மற்றும் பூரணப்படுத்தப்படாத சுவர்களையும், தரையையும் காண முடிந்ததாக, தேவாலயத்திற்கு வருகைத் தந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டி முடிக்கப்படாத சுவர்களுக்கு மத்தியில், தூசிகள் படர்ந்திருந்த தரையில் அமர்ந்து பெரும்பான்மையான பக்தர்கள் விசேட ஆராதனையில் பங்கேற்றனர்.
ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை, ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவாலயத்தின் தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்துள்ளனர்.
தேவாலயத்தின் புனரமைப்பிற்காக திரைசேறியால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிதியில் ஆறில் ஒரு பங்கிற்கும் குறைவான தொகை கிடைத்துள்ளதாக, அருட்தந்தை ரொஷான் மகேஷன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
இந்த தேவாலயத்தை புனரமைக்க 37 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக திரைசேறி அறிவித்திருந்ததாகவும், எனினும் இராணுவத்திற்கு சுமார் 6 மில்லியன் ரூபாய் மாத்திரமே கிடைத்துள்ளதாக தான் கருதுவதாக, அருட்தந்தை ரொஷான் மகேஷன் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த பக்தர்களின் புகைப்படங்களைக் கொண்ட ஒரு பேனர் சியோன் ஆலயத்தின் முன் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவற்றில் 14 சிறுவர்கள் புகைப்படங்களும் காணப்படுகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் நேற்று காலை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற பிரதான ஆராதனைகளின் பின்னர் உரையாற்றிய கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை,
“உண்மையை புதைத்து குற்றவாளிகளை திருத்துவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியில் சேர ஒருபோதும் தயாராக இல்லை.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
68 சிறுவர்கள் உட்பட 269 பேரின் உயிரைக் கொன்ற குற்றத்தில் அப்போதைய அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் அலட்சியமாக இருப்பதை வலியுறுத்திய அவர், மந்தமான செயற்பாடுகள் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் கொலைகளுக்குப் பின்னால் அரசியல் நோக்கங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது எனவும் அவர் கூறினார். ஆனால் அந்த உண்மைகள் என்ன என்பதை பேராயர் வெளியிடவில்லை.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் நாட்டுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி, கிறிஸ்தவ மதகுருமார்கள், கன்னியாஸ்திரிகள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் பங்கேற்புடன் நீர்கொழும்பில் போராட்டம் ஒன்றும் நேற்று நடத்தப்பட்டது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
