புலம்பெயர் தமிழர்களின் பூச்சிய விளைவு முதலீடுகள்
கடந்த பத்துவருட புள்ளிவிபரங்களின் சராசரிகளில் வருடாந்தம் 400 அகதிகள் இலங்கையில் இருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் கோருகின்றார்கள் இவர்களில் இலங்கையின் சிறுபான்மை இனமான 11.20 சதவீதமான இலங்கைத் தமிழர்கள் 65 சதவீதத்திற்கு மேற்பட்ட தொகையில் காணப்படுகின்றார்கள்.
இது தவிர நிபுணத்துவ வெளியேற்றத்தில் தமிழர்களது வெளியேற்றமும் கணிசமான சதவீதத்தினால் அதிகரித்தே வருகின்றது. இவை அனைத்தும் ஒரு முரண் நிலைத் தாக்கத்தினை தாய் நாட்டின் மீது மேற்கொள்கின்றது என்ற ஒரு மறைகாரணி தொடர்பில் நாம் சிந்திக்க மறந்ததொரு சமூகமாக மாறி வருகின்றோம்.
வடபுலத்தில் மட்டும் ஆண்டு தோறும் உற்சவங்கள் நடைபெறும் கோவில்கள் அண்ணளவாக 2800 என திணைக்கள மயப்படுத்தப்பட்ட தரவுகள் காண்பிக்கின்றன. இவை அனைத்திலும் மகோற்சவம் அல்லது அலங்கார உற்சவம் என சராசரியாக 10 நாட்களுக்கு குறையாத திருவிழா நாட்களை காண்கின்றன.
தமிழ் மக்களது நிதி நடவடிக்கைகள்
வடபுலத்தில் மாத்திரம் அண்ணளவாக 6000 புரோகிதர் குடும்பங்கள் வாழ்வதாக தரவுகளின் அடிப்படையில் அறிய முடிகின்றது. அதில் தொழில் முறை புரோகிதத்தினை 2850 பேர் அளவிலேயே மேற்கொண்டு வருகின்றனர்.
இக் கோவில்கள் அனைத்தும் பக்தர்களுக்கு அமைவாக குறித்த காலப்பகுதிகளில் பாலஸ்தானம் செய்யப்பட்டு முறையாக கும்பாபிசேகம் காண்கின்றன.
சாராசரியாக ஒவ்வொரு வருடமும் 60 கோவில்களுக்கு வடபுலத்தில் மாத்திரம் இராசகோபுரம் கடந்த 10 ஆண்டுகளில் அமைக்கப்பட்டு வருகின்றது. இவை தவிர அயல் நாட்டு செண்டி மேளம் தொடக்கம் இசைக் கச்சேரி வரைக்கும் இசைத்து நாகரீகமாக கொண்டாடப்படுகின்றது.
இவைகள் அனைத்தும் ஒரு சிறிய பகுப்பாய்வுச் சுட்டிகளாக எடுத்து நோக்க வேண்டியதொரு நிலையில் இருக்கின்றோம் என்பதன் அடிப்படையில் புலம் பெயர் தேசத்து வடக்கு கிழக்கு தமிழ் மக்களது நிதி நடவடிக்கைகளில் 70 வீதமானவைகள் கோவில்களை மையப்படுத்தி மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றின் ஊடாக பன்னிரண்டு இலட்சத்தினை அண்மித்த வடக்கு மாகாண வாழ் மக்களுக்குள் வெறும் 25000 பேருக்கு உட்பட்டவர்களுடைய அதாவது ஆலய நடவடிக்கைகளில் நேரடியாக ஊதியம் அல்லது நிதி பெறும் தரப்பினர் ஆனவர்கள் உடைய பயனுக்காக புலம்பெயர் தேசத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நிதியில் 70 சதவீதமானவை முன்னுள்ள இருபத்தைந்து வருடங்களில் செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை தொகுத்து நோக்கும் போது எவ்வளவு பாரியதொரு தொகை இலங்கையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக அடையாளம் காண முடியும்.
வங்கிகளில் வைப்புக்கள்
மக்கள் வங்கியின் தலைமைக் காரியாலய நிர்மாணிப்பில் வடபகுதியில் உள்ளவர்களது பாவனையில் இல்லாத வங்கிக் கணக்கு நிலுவைகளில் தான் கட்டப்பட்டதாக ஒரு கதையும் உண்டு ஆனால் இதனை உத்தியோகபற்றுடைய வகையில் உறுதிசெய்ய முடியவில்லை.
இதில் தெளிவாக நாங்கள் அறிய வேண்டிய விடயம் யாதெனில் வங்கிகளில் வைப்புக்கள் இடுவதை மாத்திரம் முதலீடு எனக் கருதும் சமூகம் வடபகுதியில மாத்திரம் செறிந்திருக்கின்றது என்பது கண்கூடு.
ஒரு பொருளாதாரத்தில் நிதி உட்பாய்ச்சல் ஏற்படும்போது அது உண்மையில் உள்ளகத்தில் புரளும் வேகத்திலும் கனதியிலும் தான் அதன் அனுகூலங்களை ஒரு சமூகம் அதியுச்சமாக அடைய முடியும்.
ஆனால் வரும் நிதியானது குறைந்தது இரண்டு அல்லது மூன்று கொடுக்கல் வாங்கல்களுடன் ஒரு இடத்தில் அடங்கி உறக்கம் கொள்கின்றது. இந்த வடபுலத்து நிதி வருகையால் வெளிநாட்டு நாணயக் கையிருப்பினை அரசாங்கம் பெற்றுக்கொள்கின்றது.
அதனை யாரும் மாற்றிவிட முடியாது அது நியமமானது. அடுத்த தளத்தில் குறித்த நிதியானது ஒரு மிக குறுகிய சனத்திரளுக்குள் மாத்திரம் உட்புகுந்து கொள்கின்றது.
அது அவர்களது அதியுச்ச நுகர்வுகளுக்கு வெளிப்படுபவைகள் தவிர வேறு எங்கோ ஒரு வகையில் வங்கிகளில் வைப்பிலிடப்படுகின்றன. இந்த நிதியானது புரள்வுக்கு உட்படும் ஒரு தொழில்துறையில் அல்லது சமூகத்திற்கு நிதியளிக்கும் தொழில்முயற்சியில் உட்புகுத்தப்படவில்லை.
அரசுக்கு வரி
அனைத்துக்கும் மேலாக வருமானத்தினை காண்பித்து அரசுக்கு வரி செலுத்தும் வகைக்குள் கூட அகப்படுவதில்லை. வட பகுதியை நோக்கி புலம்பெயர் சமூகங்களில் இருந்து நகர்த்தப்படும் ஒவ்வொரு நிதியும் ஒரு திறனற்ற நிதியாக இருப்பதற்கு இந்த ஆலயங்கள் என்ற விடயம் பிரதானமான காரணமாகின்றது.
கோவில் என்பது மத சூழலில் மத சடங்குகளை பின்பற்றுவதற்குரிய ஒரு அடிப்படையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகவும், வரலாற்றுக்காகவும், புனிதத்திற்காகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு விடயதானமுமாகும்.
தற்போதைய வாழ்க்கை முறைக்கு பக்தர்களுக்கு வழிபட நேரம் இல்லை ஆனால் கோவில்கள் பெருகிக் கொண்டு இருக்கின்றன.
அவற்றின் பௌதீக வளங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. அவற்றை பரிபாலனம் செய்யும் முகமைகள் திறன் வழிகாட்டல்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகளில் நுழைகின்றன.
பல்வேறு தொழில் நுட்ப உதவிகளுடன் அவ்வளங்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். கடவுள் இருக்கும் ஆலயத்தினையே கண்காணிப்பு கமராவால் கட்டுப்படுத்த வேண்டிய முரண்நிலை தத்துவத்திற்குள் நகர்கின்றது.
இவை அனைத்திற்கும் காரணம் அவசியமற்ற வளவிருத்தியாகும். ஆலயங்களில் மணி அடிக்க ஆள் இல்லாததால் தானியங்கி மணி மேளம் செட் வாங்கி வருகின்றோம்.
சமூக வளர்ச்சி
சுவாமி சுற்றுவதற்கு ஆட்கள் இல்லாததால் புதிதாக சிறிய சிறிய பாரம் குறைந்த வாகனங்கள் செய்து வருகின்றோம். இன்னும் சில நாட்களில் வீதி வழித்தடத்திற்கு சேக்கிட் இட்டு அதில் ஒரு தொகுதியைப்பொருத்தி சுவாமியைச் சுற்ற விட்டு சூம் இல் திருவிழா பார்க்கும் ஒரு சமூக வளர்ச்சியில் நாங்கள் பயணித்துக்கொண்டு இருக்கின்றோம்.
அனைத்து விகாரைகளிலும், அனைத்து பள்ளிகளிலும், அனைத்து தேவாலயங்களிலும் பூசைகள் மற்றும் அனுட்டானங்கள் ஒரு நியம நேரத்தில் இடம்பெறும் ஆனால் அனைத்து கோவில்களிலும் ஒரு நியம நேரத்தில் பூசை பார்க்க முடிவதில்லை,
காரணம் புரோகிதர் தட்டுப்பாடு, ஒவ்வொரு கோவிலாக தான் அவரால் தரிசனம் செய்ய முடியும், ஆலயத்தில் சுவாமி தரிசனம் பார்ப்பதை விடவும் புரோகிதர் தரிசனம் பார்ப்பதே நெருக்கடியாக மாறிவருகின்றது.
ஆலயம் கூட்டுவதற்கு சம்பள ஆள், அன்னதானம் சமைப்பதற்கு சமையலாளர், சாப்பிடும் நபர்களுக்கு நிலத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாத உடல்வாகு, நெகிழிப் பைகளில் வீடுகளுக்கு அனுப்பும் துர்பாக்கியம், உண்மையாக உணவுக்கு நெருக்கடியாக சமூகம் இன்னமும் எங்கோ ஒருபுறம் வடக்கிலும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றது.
ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் இவ்வாறான 500 பேருக்கு குறையாத தொகையுடைய அதிவறுமைக் குடும்பங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இவை சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் உண்கின்றன. ஒவ்வொரு பாடசாலைகளிலும் காலை உணவினை பொருளாதார நெருக்கடி காரணமாக தவிர்த்து வரும் மாணவர்கள் 5 சதவிகிதம் பேர் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.
இந்த பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்கு தனிலும் எங்களது சமூகத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லை. பொது விடயங்களில் உதவி செய்கின்றோம், ஒத்துழைப்பு வழங்குகின்றோம் என்று பல பல நிறுவனங்கள் அமைப்புக்கள் நாட்டிலும் சர்வதேசங்களிலும் முளைவிட்டு இருக்கின்றன.
அரசியல் தீர்வுகள்
ஆனால் இன்றுவரை முறையான முன்னேற்றத்தினை எமது சமூகத்தில் காண்பிக்க முடியவில்லை என்பது வருத்தமானது. இதனை பொறுப்புடன் பகுப்பாய்வு செய்து உத்தியோகபற்றுடைய வகையில் தரவுகளை வெளியிடவேண்டிய பல்கலைக் கழகங்கள் அரசியல் முனைவாக்கம் செய்கின்றன, ஆலயங்கள் அத்திரட்சியால் நிதி காண்கின்றன, அரசியல்வாதிகளுக்கு இவ்விடயதானம் தெரியவே இல்லை, அவர்கள் வாழ்க்கையை வாழவே முடியாத ஒரு சமூகம் இருக்கும் போது அதன் அரசியல் தீர்வுதேடி அலைகின்றார்கள்.
அதனை நாட்டிலும் பற்றாக்குறைக்கு சர்வதேசத்திலும் தேடிச் சென்று ஆற்றுப்படுத்த முனைவதாக காண்பிக்கின்றார்கள். கோவில்கள் மீதான அனைத்து நிதியீட்டங்களும் ஒரு வகையில் மட்டுப்படுத்தப்பட்டு கிரமப்படுத்தப்பட்டு முதலீடுகள் தொடர்பாக மீளாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட வேண்டும்.
மிக முக்கியமாக பொது வேட்பாளர் நிறுத்துவது தொடக்கம் அரசியல் தீர்வுகளை பெற்றுத்தருபவர்கள் முதல் வடக்கு கிழக்கினை கனவுகாண்பவர்கள் வரைக்கும் சற்றே விழிப்படைந்து கனவில் இருந்து வெளிவந்து ஒரு முழுமையான சமூக பொருளாதார ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.
அதனை ஒரு சிறந்த நிபுணத்துவம் மிக்க முறையில் மேற்கொள்ள வேண்டும். அதன் விளைவுகளை அடிப்படையாக கொண்டு தமிழ் சமூகம் ஒற்றுமையாக ஒரு திட்டம் வகுத்து பொருளாதார மேம்பாட்டிற்கு பணியாற்ற வேண்டும்.
சர்வஜன வாக்கெடுப்பை கோரும் தமிழ் தரப்பு முறையானதொரு சமூக பொருளாதார ஆய்வினை முறையான வகையில் மேற்கொண்டு அவற்றின் அடைவுகளின் பால் செயலாற்றினால் பதினொரு சதவீத மக்களது கைகளில் இலங்கையின் பொருளாதாரத்தினை தங்கியிருக்க வைக்க முடியும்.
முழுமையுமாக பொருளாதார போசாக்கின் ஊடாக தமிழ் மக்களது அரசியல் பிரச்சினை அணுகப்பட வேண்டும். இலங்கை அரசினால் தமிழ் மக்களது செயற்பாட்டினை முடக்கிவிட முடியாது காரணம் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களது தொகையிலும் கணிசமானவர்கள் சர்வதேசங்களிலும் வாழ்கின்றார்கள்.
புத்தியுடைய ஒரு சமூகமாக ஒற்றுமையாக நாம் பயணிப்போம் ஆனால் எமது பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தகுதி உடையவர்களாக தமிழர்கள் ஆகிய நாமே மாறிவிட முடியம். இல்லையேல் செண்டி மேளத்திற்கும் இராச கோபுரத்திற்கும் திருவிழாக்களில் தமன்னாக்களிற்கும் நிதி வழங்கும் ஒரு சமூகமாக தான் வாழ்வோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 10 August, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.