கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட சஹ்ரானின் குடும்பம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் குடும்பத்தினர் இன்று மாலை கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்டதாக பொரளை பொலிசார் எமக்கு தெரிவித்தனர்.
கடந்த 2019 ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாஷிம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
சஹ்ரானின் குடும்பம்
இந்நிலையில் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முந்திய பெரிய வௌ்ளிக்கிழமை தினத்தில் சஹ்ரானின் மனைவி, மைத்துனர்கள் உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற காலிமுகத்திடல் பகுதியில் ஒன்று கூட முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் கொழும்பு வருகை குறித்து குருநாகல் கட்டுப்பொத்தை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள், கொழும்பின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இரகசிய அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தீவிரவாத அமைப்பை சேர்ந்த சஹ்ரானின் குடும்ப உறவினர்கள் ஏதேனும் சதிநாசகார செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு குறித்த அறிவித்தல் மூலமாக கட்டுப்பொத்தை பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சுற்றி வளைப்பு
இதனையடுத்து சஹ்ரான் குடும்பத்தினர் பயணித்த பேரூந்து வண்டியை கொழும்பு பொரளை பொலிசார் சுற்றி வளைத்துள்ளனர்.
கட்டுப்பொத்தை பொலிசார் வழங்கியிருந்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பொரளை பொலிசார் சஹ்ரான் குடும்பத்தை தீவிரமாக விசாரித்துள்ளனர்.
எனினும் அவர்கள் குடும்ப சுற்றுலா ஒன்றுக்காகவே கொழும்புக்கு வருகை தந்திருந்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேர விசாரணையின் பின்னர் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
