விடுதலைப் புலிகள் குறித்து இராணுவத்திற்கு தகவல் வழங்கிய சஹ்ரான்? - சரத் பொன்சேகா கூறிய தகவல்
சஹ்ரான், விடுதலைப் புலிகள் குறித்து அந்த நேரத்தில் இராணுவத்துக்கு தகவல் வழங்கியதாக சிலர் கூறுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சஹ்ரான் ஒரு பங்கைக் கொண்டிருந்ததை தம்மால் நினைவுபடுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பேசிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் புதிதாக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அத்துடன் இந்த தாக்குதல் குறித்து இன்று தனது சொந்த அறிக்கையை வெளியிட்டதாக பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது,
இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளை எடுக்க பாதுகாப்பு செயலாளருக்கு அதிகாரம் இல்லை. பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவு இல்லாமல் பாதுகாப்பு சோதனைகளை கூட அவர்களால் செய்ய முடியாது என்பதால் முன்னாள் காவல்துறை அதிபரையும் தாம் குறை கூறவில்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அறிந்திருந்தததை மறுக்க முடியாது, ஏனெனில் காவல்துறை அதிகாரி நிலந்த ஜயவர்தன அவரை அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சஹ்ரான் ஒரு பங்கைக் கொண்டிருந்ததை தம்மால் நினைவுபடுத்த முடியாது,
எனினும் அந்த நேரத்தில் அவர் இராணுவத்துக்கு தகவல் வழங்கியவர் என்று சிலர் கூறுகின்றனர் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.