மட்டக்களப்பு ஆலயத்தில் இளைஞர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் : குருக்கள் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகாயம் (Photos)
மட்டக்களப்பு - கல்லடி திருச்செந்தூர் ஆலயத்திற்குள் உள்நுழைந்த இளைஞர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குருக்கள் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று முன்தினம்(05) இரவிலும் நேற்று(06) பகலிலும் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் காணியின் கடற்கரை பகுதியில் இரவில் இளைஞர் குழு ஒன்று போதைப்பொருட்கள் பாவித்து வந்துள்ளனர். இதனால் பொலிஸாரின் ஆணைக்கினங்க ஆலய நிர்வாகம் ஆலயத்தைச் சுற்றி மதில் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன்போது குறித்த இளைஞர் குழுவினர் தொடர்ந்து மதில் அமைப்பதற்கு இடையூறு விழைவித்து வந்ததுடன், கட்டிய மதிலின் ஒரு பகுதியை உடைத்துள்ளனர்.
இந்நிலையில் கோவில் கோபுரம் அமைத்துவரும் வந்தாறு மூலையைச் சேர்ந்த ஆச்சாரியர்கள் இருவர் வேலையை முடித்துவிட்டு கோவிலிற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் அமர்ந்து இருந்துள்ளபோது, அங்கு திடீரென வந்த குறித்த இளைஞர் குழுவினர், அவர்கள் மீது பொல்லுகளால் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
தாக்குதலின் போது காயமடைந்த இரு ஆச்சாரியர்களும் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் மீண்டும் நேற்று காலையில் கோவிலுக்குள் உள்நுழைந்த இளைஞர் குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் குருக்கள் ஒருவரும் அங்கு தொண்டு செய்துவரும் இளைஞன் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இத்தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







