கொத்மலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று (15) வெதமுல்ல சந்திக்கு அருகில், மதுபான விற்பனை நிலையத்தை அண்மித்த பகுதியில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
அதனையடுத்து கொத்மலை 1990 அவசர நோயாளர் காவுவண்டி மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மருத்துவமனை பொலிஸார் இன்று (16) கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.

வெததமுல்ல தோட்டம், ரம்பட பகுதி, லிலீஸ் லேன் பிரதேசத்தைச் சேர்ந்த சிவலிங்கம் ஜெயகிருஷ்ணா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.