போதைப்பொருளுடன் இளைஞர் கைது! (Photos)
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளில் பொலிஸார் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் பேருந்தில் போதைப்பொருள் எடுத்துச்செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த பேருந்தினை ஈரப்பெரியகுளம் பகுதியில் மறித்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது அதில் பணித்த 39 வயதுடைய இளைஞர் ஒருவரின் பயணப்பொதியிலிருந்து 6.5 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைப்பற்றிய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருளையும், சந்தேக நபரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகள் : திலீபன்
பாணந்துறை
பாணந்துறை ரதுவத்த பிரதேசத்தில் 15 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பல வருடங்களாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து இரண்டு கைபேசிகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வலான பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகள் : ராகேஷ்
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் சில இளைஞர்கள் மத்தியில் கஞ்சாப்பாவனை இடம்பெற்று வருவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இளைஞர் ஒருவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
உடுப்புக்குளம் முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்த 23 அகவையுடை இளைஞனே 25 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் மீது வழக்கு பதிவு செய்த முல்லைத்தீவு பொலிஸார் குற்றவாளியினை நேற்று (16) பதில் நீதவான் வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் செல்ல பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், அடுத்த வழக்கு எதிர்வரும் 29.03.2022 அன்று திகதியிடப்பட்டுள்ளது.

