மோட்டார் சைக்கிள் வாங்கச் சென்ற இளைஞர் செய்த செயல்
மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் ஒன்றை ஓட்டிப் பார்ப்பதாக கூறி, திருடிச் சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(19.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வயது இளைஞர் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காத்தான்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்ற இளைஞர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாக உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னர், மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்க வேண்டும் என உரிமையாளரிடம் அனுமதி வாங்கிய பின்னர், அங்கிருந்து எடுத்துச் சென்று மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிஞ்சை விளக்கு அருகில் நிறுத்தி விட்டு, இன்னொரு நபருக்கு மோட்டார் சைக்கிளை கைமாற்ற முயன்றுள்ளார்.
இதனையடுத்து, மட்டக்களப்பு பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த காலங்களில் இவர் செய்த 8 குற்றச் செயல்களும் கண்டறியப்பட்டுள்ளன.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.