யாழில் 17 வயது சிறுமி உயிரிழப்பு விவகாரம்: களமிறக்கப்பட்ட பொலிஸார்
யாழில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடாத்த இரண்டு பொலிஸ் அணிகள் களமிறக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் இரண்டு பொலிஸ் அணிகள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு அணிகள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் உரிய சட்ட நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த (23.07.2023) ஆம் திகதி யாழ்ப்பாணம்- கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிபுரிந்த 17 வயதுடைய சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையிலே மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க இந்த பொலிஸ் அணிகள் களமிறக்கப்பட்டுள்ளன.