யேமனில் நிலவி வரும் அரசியல் பதற்றம்: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிரடி அறிவிப்பு
யேமனில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டிலிருந்து தனது "பயங்கரவாத எதிர்ப்பு" படைப் பிரிவுகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
தெற்கு பிரிவினைவாதிகளுக்கு (STC) ஆயுத ஆதரவு வழங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்குத் தான் எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
யேமன் அரசுக்கு ஆதரவு
முன்னதாக, யேமனின் ஜனாதிபதி தலைமை பேரவை தலைவர் ரஷாத் அல்-அலிமி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு, அடுத்த 24 மணிநேரத்திற்குள் அமீரகப் படைகள் யேமனை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த விவகாரத்தில் யேமன் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சவூதி அரேபியா, யேமனின் முகல்லா துறைமுகத்தில் அமீரகத்தால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதக் கப்பல்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பிரிவினைவாதிகளுக்குச் செல்லவிருந்த ஆயுதங்கள் இவை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சவூதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, யேமன் ஜனாதிபதி பேரவை நாடு முழுவதும் அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளதுடன், அந்நாட்டின் நிலம், நீர் மற்றும் வான்வழிப் போக்குவரத்து எல்லைகள் அனைத்தையும் 24 மணிநேர முற்றுகைக்கு உட்படுத்தி உத்தரவிட்டுள்ளது.
இந்த அடுத்தடுத்த நகர்வுகள் வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.