யாழ்.செம்மணிச் சந்தியில் இப்படியொரு செயற்பாடா.. மகிழ்ச்சியில் மக்கள்(Photos)
யாழ்ப்பாணம் செல்வோரை யாழ். மாநகருக்குள் வரவேற்கும் வளைவு செம்மணிச் சந்தியில் இருக்கின்றது.
A9 பாதை வளைந்து யாழ். செல்லும்போது செம்மணி ஊடாக சென்று நல்லூர் முருகன் கோவிலூடாக பருத்தித்துறை வீதியை தொடும் ஒரு பாதையும் இந்த சந்தியில் இருந்து ஆரம்பிக்கின்றது.
குளிர்ச்சியான பேருந்து தரிப்பிடம்
A9 வீதியில் அமைந்துள்ள பழைய யாழ் வரவேற்பு கோபுரத்திற்கு அண்மையில் அமைந்திருக்கின்றது இந்த பேருந்து தரிப்பிடம். அருகில் பிள்ளையார் ஆலயமொன்றும் இருக்கின்றது.
ஆலமரமொன்றின் கிளைகளின் கீழே அமைக்கப்பட்ட இந்த பேருந்துக்காக காத்திருக்கும் இடம் சூழலுக்கு பொருத்தமாக நிறமும் பூசப்பட்டு இருக்கிறது.
பிள்ளையார் ஆலயமும் அதனது கிணறும் ஆலமரமும் அதன் நிழலும் குளிர்ச்சியான காற்றும் பேருந்து தரிப்பிடத்தின் பின்னாக உள்ள வயல் வெளியும் தனக்கு மன அமைதியைத் தருவதாக மூதாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
பேருந்துக்காக காத்திருப்பது மட்டுமல்ல மாலை வேளையில் தான் இந்த இடம் வந்து இதன் இயற்கை சூழலை கண்கொண்டு மனம் பேசி மகிழ்ந்து செல்வதாகவும் கவிநயத்தோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
சிவபூமி சிவலிங்கத்தையும் செம்மணி பாதையில் உள்ள வரவேற்பு வளைவையும் கூட இந்த தரிப்பிடத்தில் இருந்தவாறு பார்த்து மகிழலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பயணிகள் என்ன சொல்கிறார்கள்?
ஏனைய பேருந்து தரிப்பிடங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதன் அமைவிடம் மனதைக் கவர்வதாக இருக்கின்றது.
மற்றைய பேருந்து தரிப்பிடங்களை அமைக்கும் போது இது போன்ற அமைப்பைப் பெறுவதற்கு கவனமெடுத்தால் பேருந்து தரிப்பிடங்கள் நல்ல வரவேற்பை பெறும் என குறிப்பிடும் அவர்களில் சிலர் ஏனைய பேருந்து தரிப்பிடங்களில் குப்பைகள் சுத்தம் செய்யப்படாது இருப்பதையும் சுட்டிக் காட்டினார்கள்.
பேருந்து தரிப்பிடங்களின் அருகில் நிழல் தரும் மரங்களை நாட்டி வளர்த்தால் அதன் சூழல் மாறிவிடும் எனவும் சிலர் குறிப்பிட்டனர்.
உளவியல் நோக்கில்
உளவியல் துறையைச் சேர்ந்த ஒருவரோடு பேருந்து தரிப்பிடங்களின் அழகுறு தோற்றம் பற்றி பேசும் போது மனிதர்களின் மனங்களை இலகுவாக்கும் நல்லதொரு சூழல் களமாக பேருந்து தரிப்பிடங்களை நாம் பயன்படுத்த முடியும்.
அதிகமான மக்கள் பேருந்து பயனங்களைச் செய்வதால் அவர்கள் மனங்கள் இரசணை கொள்ளும் வண்ணம் அவற்றை அமைத்தால் மக்களிடையே ஏற்படும் மன அழுத்தங்களை குறைத்திட ஒரு துணை கிடைப்பதாக இருக்கும்.
இன்றைய காலத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகரிப்பதனை மருத்துவத் தரவுகள் சுட்டி நிற்கின்றன.
செம்மணிச் சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிட கொட்டகையின் அமைவிடத் தோற்றம் மக்களிடையே மன இலகுவாக்கலை செய்து விடுவதில் பங்களிப்புச் செய்யும் என எடுத்துரைத்தார்.
இத்தகைய பேருந்து தரிப்பிடங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் போது நாளிதழ்களைப் படிப்பதற்கும் அல்லது சிறிய நூல்களை வாசிப்பதற்கும் ஒரு சூழலை பேருந்து தரிப்பிடங்களின் ஆக்க முடியுமென்றால் நல்லதொரு நாளைய சமூகத்தினை தோற்றுவிப்பதில் வெற்றி நோக்கி நம்மை கூட்டிச் செல்லும் என தன் சிந்தனையினையும் அவர் பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
கிருசாந்தி குமாரசாமி காணாமல் போன இடம்
1996 செப்டம்பர் 7ஆம் நாளன்றுகிருசாந்தி குமாரசாமி இந்த இடத்தில் இருந்த இராணுவச் சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கிருசாந்தி குமாரசாமி கூட்டுப் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த துயரமிகு செயலை ஐந்து இராணுவத்தினர் உட்பட ஆறு பேர் மேற்கொண்டதாகவும் தொடர் அழுத்தங்களுக்கு பின் மேற்கொண்ட நீதிமன்ற விசாரணையில் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாகவும் செம்மணிச் சந்தி பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் ஒரு பல்நோக்கு கூட்டுறவுப் பணியாளர்.
சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தர இரசாயன பாடப் பரீட்சையை எழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் தான் இந்த நிகழ்வு நடைபெற்றிருந்தது.
இந்த படுகொலையின் போது கிருசாந்தி, அவரை தேடிச் சென்ற அவரது அம்மா, தம்பி,மற்றும் ஒரு உறவினரும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கெட்ட செய்தி - இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான் News Lankasri
